மணிப்பூர் பற்றி எரியும் போது மோடி 7 நாடுகளுக்கு போனார்.. அவர் என்ன விற்பனை பிரதிநிதியா? சவுகதா ராய்
டெல்லி: மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய், மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. அங்கே ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலமும் பற்றி எரிந்த நிலையில், இன்னும் அமைதியான சூழல் ஏற்படவில்லை.

மணிப்பூர் வன்முறையைத் தடுக்க அங்குள்ள பாஜக அரசு தவறிவிட்டதாகப் பலரும் விமர்சித்தனர். "இந்தியா" கூட்டணி எம்பிகள் நேரடியாக வன்முறை ஏற்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று அங்கு நிலைமையைப் பார்வையிட்டனர்.
மணிப்பூர்: அங்கு நிலைமை ரொம்பவே மோசமாக இருப்பதாகவும் வன்முறையைத் தடுக்க அரசு தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இதனிடையே மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த தீர்மானத்தின் மீது முதலில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் பேசவில்லை.
அவருக்குப் பதிலாகக் காங்கிரஸ் எம்.பி கெளரவ் கோகாய் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீது முதலில் பேசினார். அதன் பிறகு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசினார். அதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் இந்த தீர்மானம் மீது உரையாற்றினார். அப்போது அவர் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேற்கு வங்கத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது என்று கூறிய அவர் தனிப்பட்ட முறையில் மோடியை வெறுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் பேச்சு மிரட்டும் தொனியில் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், அமலாக்கத்துறை தயாராக இருக்கிறது என பாஜகவினர் நாடாளுமன்றத்திலேயே பேசுகின்றனர் என்றும் மேற்கு வங்கத்தைக் கண்காணிக்க பல்வேறு ஆணையங்களை அனுப்பும் மத்திய அரசு மணிப்பூருக்கு எதையுமே அனுப்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தனக்கு முன்பு பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மணிப்பூர் குறித்து ஒருவார்த்தை கூட பேசலையே என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
விற்பனை பிரதிநிதியா: பிரதமர் மோடி கூட 80 நாட்களுக்குப் பின்னரே மணிப்பூர் குறித்து வாய் திறந்துள்ளார் என்றும் சவுகதா ராய் விமர்சித்தார். மேலும், "மணிப்பூர் பற்றி எரியும் போது 7 நாடுகளுக்குப் போனார்.. எகிப்து பிரமிடுகளைப் பார்க்கப் போனார் பிரதமர் மோடி.. இருப்பினும், மணிப்பூருக்குச் சென்று அங்கு நிலைமையைப் பார்க்கவில்லை.. பிரதமர் மோடி என்ன விற்பனை பிரதிநிதியா? உலக பிரதிநிதியா?
மணிப்பூர் ஆட்சியைக் கலைக்க வேண்டும்.. அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.. மத்திய அரசு தவறும் போது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறது.. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவாக்கரை ஆளுநர்களை அனுப்பி தொந்தரவு செய்கிறது மத்திய அரசு.. எதிர்க்கட்சிகளைக் குறி வைத்தே அமலாக்கத் துறை நடவடிக்கை இருக்கிறது. மேலும், பாஜகவிடம் மிகப் பெரிய சலவை இயந்திரம் இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் கூட அங்குச் சென்றால் தூய்மையாகிவிடுவார்கள்.
கடும் தாக்கு: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று சொன்ன அவர்கள் அதையும் செய்யவில்லை. இதனால் இன்னும் இன்னும் விவசாயிகள் தற்கொலைகள் நடக்கிறது. விமான நிலையம், சிமென்ட் ஆலைகள் என அனைத்தையும் அதானி குழுமம் மிரட்டி வாங்குகிறது.. டாடா ரிலையன்ஸ் நிறுவனங்களை விட அதானி குழுமம் வேகமாக வளர்கிறது.
இரண்டு மூன்று குழுமங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து பலன் பெறுகிறது. ஏழைகள் இல்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை" என்று அவர் சரமாரியாக சாடினார்.












Click it and Unblock the Notifications