அபிஜித் தீப்கே மாயம்.. டெல்லி கைதுக்கு பின் கரப்பான்பூச்சி கட்சியின் ‘டாப்’ 3 தலைவர்கள் எங்கே? பெரும் குழப்பம்
டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தையொட்டி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை பேலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் மாயமாகி உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் அறிவித்தனர். நேற்றைய போராட்டத்திற்காக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளரான சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டவர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தனர்.

அப்போது அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விமானத்தை விட்டு இறங்கவிடாமலேயே போலீசார் அவர்களை கைது செய்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாததால் அசம்பாவிதங்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எங்கு வைக்கப்பட்டனர்? என்ற விவரம் வெளியாகவில்லை. இளைஞர்கள், இளம்பெண்கள் ஆக்ரோஷமாக போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டக்காரர்கள் அவர்கள் இருக்கும் இடத்துக்கு வரலாம் என்பதால் 3 பேர் இருக்கும் இடம் பற்றி போலீசார் ரகசியம் காத்தனர்.
பொதுவாக ஒரு அமைப்பு அல்லது கட்சியினர் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக அவர்களை போலீசார் கைது செய்துவிட்டு மாலை 6 மணிக்கு பிறகு வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அதன்படி தான் அபிஜித் தீப்கே உள்பட 3 பேரையும் போலீசார் விடுவிப்பார்கள் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விடுவிடுக்கப்படவில்லை.மாறாக கைதான மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நேற்று இரவு 10.53 மணிக்கு வெளியிடப்பட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: '' 12 மணிநேரம் ஆகிவிட்டது. எந்த தகவலும் இல்லை. எந்த பொறுப்பேற்பும் இல்லை. உடனடியாக அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவை விடவிக்க வேண்டும். அவர்கள் இருக்கும் இடம் பற்றி தெரிவிக்க வேண்டும். உடனடியாக அவர்களின் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். மக்களை மறைத்து வைத்து கொண்டு அதனை ஜனநாயகம் என்று சொல்ல முடியாது'' என கூறப்பட்டுள்ளது.
It’s been 12 hours. No information. No accountability.We demand: •Immediate release of @abhijeet_dipke , @SauravDassss & @AshutoshRanka.•Immediate disclosure of their whereabouts. •Immediate access to their lawyers. You cannot make people disappear and call it democracy.
— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 10, 2026
அதுமட்டுமின்றி டெல்லி காவல் ஆணையருக்கு கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது. அபிஜித் தீப்கே உள்ளிட்ட டாப் 3 தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அமைப்பு பொறுப்பாளர் அஜிங்கியா ஷிண்டே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஜ் ரங்கா உள்ளிட்டோர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கு இருக்கின்றனர்? என்பது பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
12 மணிநேரம் ஆகியும் அவர்களை பற்றிய தகவல் இல்லை. குடும்பத்தினர், வழக்கறிஞர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவர்கள் எங்கு இருக்கின்றனர்? என்ற விவரம் மர்மமாக உள்ளது. இத்தகைய செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. டெல்லி போலீசார் இதற்கு தாமதமின்றி பதிலளிக்க வேண்டும். எந்த அதிகாரியும் சட்டத்தை விட உயர்ந்தவர்கள் இல்லை'' என்று காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் எங்கே உள்ளனர்? என்பது புரியாத புதிராக உள்ளது. உடனடியாக டெல்லி போலீசார் அவர்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
