ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கம்பேக்.. தெலுங்கானாவில் காங்.! இரண்டிலும் பாஜகவுக்கு ஷாக்! புது சர்வே
டெல்லி: தெலுங்கு பேசும் மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்தியா டுடே புது சர்வேயை வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதற்கிடையே இந்தியா டூடே நிறுவனத்தின் மூட் ஆப் தி நேஷன் சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.

இதில் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா டூடே வெளியிட்டுள்ள சர்வே சுவாரசியமானதாக இருக்கிறது.
ஆந்திராவில் என்ன நிலை: ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 25 லோக்சபா இடங்கள் உள்ளன. அதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 25 தொகுதிகளில் 17 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது ஆந்திராவில் இருக்கும் அனைத்து லோக்சபா இடங்களும் பிராந்திய கட்சிகளுக்கே செல்லும் என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் சரி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் சரி இங்கே ஒரு இடம் கூட கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
வாக்கு வங்கி: வாக்கு சதவிகித்தை பொறுத்தவரைக் கடந்த முறை 49% வாக்குகளைப் பெற்ற ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 41% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் வாக்கு வங்கி 40%இல் இருந்து இந்த முறை 45%ஆக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. என்டிஏ, இந்தியா கூட்டணி வாக்குகள் அதிகரித்தாலும் கூட இரு கூட்டணிகளாலும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2018 லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை அதில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 தொகுதியில் வென்று இருந்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. ஆனால், இந்த முறை நிலைமை அப்படியே மாறியுள்ளது சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா: அதேபோல மற்றொரு தெலுங்கு பேசும் மாநிலமான தெலுங்கானாவில் மொத்தம் 17 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 10 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு வரை தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி வெறும் 3 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபோல மஜ்லீஸ் கட்சி ஒரு இடத்தில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஹைதராபாத் தொகுதியில் இருந்து எம்பியாக இருக்கும் நிலையில், அவர் அந்த இடத்தை தக்க வைப்பார் எனத் தெரிகிறது.
வாக்கு வங்கி: வாக்கு வங்கியைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சிக்கு 41% வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெறும் 29.8% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், அதை விட 12% வாக்குகள் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து டிஆர்எஸ் கட்சி 29.1% வாக்குகளையும், பாஜக 21% வாக்குகளையும் பெறும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் டிஆர்எஸ் மொத்தமுள்ள 17 சீட்களில் 9இல் வென்றது. அதேநேரம் தெலுங்கானாவில் பாஜக 4 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications