Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் டூ டெல்லி.. துணை ஜனாதிபதியான தமிழ்நாட்டின் சிபி ராதாகிருஷ்ணன்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பாக போட்டியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலமாக 15வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பேற்க உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், எப்படி அரசியலில் படிப்படியாக முன்னேறி இந்த நிலையை அடைந்தார்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தன்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்ட நிலையில், 452 வாக்குகள் பெற்று சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Who is CP Radhakrishnan the new Vice president his journey from Tirupur to National politics

சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தைச் சேர்ந்த இவர், துணை ஜனாதிபதி பதவி வரை சென்றது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம். திருப்பூரில் அக்டோபர் 20, 1957ல் பிறந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 16 வயதிலேயே ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன சங்கம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன், எமர்ஜென்சி காலத்தில் மாணவர்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தி கவனம் ஈர்த்தார். பெரும்பாலான மூத்த பாஜக தலைவர்களைப் போலவே இவரும் ஜனதா கட்சியில் இருந்துள்ளார்.

கோவை தொகுதி

பிறகு பாஜகவில் இணைந்த இவர், படிப்படியாக அரசியலில் மேலே வந்தார். கோவை குண்டுவெடிப்பு சம்பவமும் அதன் பிறகு அங்கு நடந்த சில அரசியலுமே கோவையில் பாஜக காலூன்றக் காரணமாக இருந்தது. அப்போது பாஜகவின் முகமாக இருந்தவர் ராதாகிருஷ்ணன். இதன் காரணமாகவே 1998, 1999 ஆகிய மக்களவை தேர்தல்களில் கோவையில் அவரால் வெல்ல முடிந்தது. இருப்பினும், அதன் பிறகு 2004, 2014, 2019 என மூன்று தேர்தல்களில் இவர் போட்டியிட்ட போதிலும் இரண்டாம் இடமே பிடித்தார்.

இருந்தாலும் 2014ல் திமுக, அதிமுக இரு திராவிட கட்சிகள் கூட்டணி இல்லாமல் பாஜக சார்பில் ராதாகிருஷ்ணன் தனித்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி 3.8+ லட்சம் வாக்குகளைப் பெற்றார். இதுவே கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உள்ள செல்வாக்கைக் காட்டுவதாக இருக்கிறது.

பல முக்கிய பதவிகள்

கட்சி ரீதியாகவும் முக்கியமான நபராகவே ராதாகிருஷ்ணன் இருக்கிறார். 1990- 1995 மற்றும் 2001- 2006 என இரு முறை தமிழக பாஜக மாநில தலைவராக இருந்துள்ளார் சி.பி ராதாகிருஷ்ணன். அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்தெடுக்க பல்வேறு பணிகளை செய்துள்ளார். குறிப்பாகக் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரையும் நடத்தினார். அதற்கு ஓரளவுக்கு நல்ல பலனும் இருந்தது.

இவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக 2014ல் மோடி தலைமையில் பாஜக முதல்முறையாக ஆட்சியை அமைத்தவுடன் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தேசிய கயிறு வாரிய தலைவர் பதவி தரப்பட்டது. மேலும், அதன் பிறகு தேசிய அரசியல் பக்கம் போன ராதாகிருஷ்ணன் பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள பாஜக பொறுப்பாளர் எனப் பல பதவிகளை வகித்தார்.

ஆளுநர் பதவி

இந்த சூழலில் தான் 2023ல் அவர் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கட்சி பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக பதவியேற்றார். 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிடப் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவியைத் தமிழிசை ராஜினாமா செய்த போது, அந்த கூடுதல் பொறுப்பும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தான் தரப்பட்டது. அதன் பிறகு கடந்தாண்டு ஜூலை மாதம் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

எப்போதும் நிதானமான தலைவராக அறியப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன், இப்போது துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதனை தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்காத பல கட்சிகளும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளித்ததால், அவரின் வெற்றி எளிமையாகியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+