நகரும் கண்ணாடி கூண்டு.. தூசு கூட நுழைய முடியாத வாகனம்.. யார் இந்த கோடீஸ்வர துறவி?
டெல்லி: நகரும் கண்ணாடி கூண்டில், அமைச்சர்களுக்கு இணையான பாதுகாப்பு வசதிகளுடன் வலம் வரும் கோடீஸ்வர துறவியான மகாந்த் சுவாமி மகராஜ். யார் இவர் ?
கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக சென்றிருந்தார். அப்போது அவரிடம் இந்து மக்களுக்காக கோயில் கட்ட வேண்டும் என இந்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஐக்கிய அமீரக அரசிடம் கோயிலுக்கு இடம் ஒதுக்குவது குறித்து பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு ஐக்கிய அமீரக அரசும் அனுமதி அளித்தது.
மேலும் அந்த கோயிலை கட்டுவதற்கு துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அபுதாபி அரசு சார்பில் கோயில் கட்ட நிலத்தை அன்பளிப்பாக தருவதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பில் இருந்த தற்போதைய இளவரசருமான அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.

இந்த கோயிலின் கட்டுமான பணிகளுக்கும், நிர்வகிக்கவும் குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த BAPS (போச்சன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா) என்ற ஆன்மீக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து அபுதாபியின் ரக்பா பகுதி அருகே முரைக்காவில் கடந்த சில ஆண்டுகளாக கோயில் கட்டுமான பணிகள் நடந்தன.
இந்த கட்டுமான பணிகள் எல்லாம் கடந்த மாதம்தான் முடிவடைந்தன. அபுதாபியின் முதல் இந்து கோயிலை இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பிஏபிஎஸ்ஸின் தலைமை குரு மகாந்த் சுவாமி மகராஜ் இந்த கோயில் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்கி பூஜைகளை வழிநடத்துகிறார்.

இந்தியாவில் தொடங்கி அமெரிக்கா, கனடா, லண்டன் என உலகில் 1100 க்கும் மேற்பட்ட அரண்மனை போன்ற கோயில்களை பிஏபிஎஸ் எனும் அமைப்பு கட்டியுள்ளது. பிஏபிஎஸ் என்பது ஒரு தன்னார்வ ஆன்மீக அமைப்பாகும். இந்திய கலாச்சாரத்தையும் இந்து மத நம்பிக்கையையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த அமைப்பினர் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள்.
இதற்காக உலகம் முழுவதும் பல பிரம்மாண்ட கோயில்களை கட்டுகிறார்கள். நிறைய விழாக்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரண நிதியையும் இந்த அமைப்பினர் வழங்கி வருகிறார்கள். இவற்றை செய்வதற்கான நிதி பிஏபிஎஸ்ஸுக்கு வரும் அன்பளிப்பை கொண்டுதான்.

இந்தியாவுக்கு வெளியே இருக்கும் பிரம்மாண்டமான கோயில்களில் இரண்டாவது மிக பெரிய கோயில் பிஏபிஎஸ்தான். நியூ ஜெர்சியில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் 185 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில்கள் அரண்மனை போல் கட்டப்படுவதால் இதன் உள்ளே சென்றாலே சிற்பக் கலைகளின் பிரம்மிப்பால் நாம் மெய் மறந்துவிடும் சூழல் உள்ளது.
நாம் எப்படி சிவன், ஐயப்பன், பெருமாள், விநாயகர், முருகன் என சுவாமிகளை வைத்து வழிபடுகிறோமோ அது போல் பிஏபிஎஸ் அமைப்பும் சுவாமி நாராயணா அக்ஷுருதமில் பகவான் ஸ்வாமி நாராயணை கடவுளாக வழிபடுகிறார்கள். பிஏபிஎஸ்ஸின் 6ஆவது ஆன்மிக குரு மகாந்த் சுவாமி மகராஜ் உள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பல மக்களை பார்க்க வேண்டும் என்பதாலும் கண்ணாடி வாகனத்தில் வலம் வருகிறார். அவருக்கு அமைச்சர்களுக்கு இணையான பாதுகாப்பு வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயிலை திறந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது அபுதாபியில் பிஏபிஎஸ் கோயிலையும் திறந்து வைக்கிறார்.
மகாந்த் சுவாமி 1933 ஆம் ஆண்டு தஹிபான் மற்றும் மணிபாய் நாராயண பாய் பட்டேலுக்கு மகனாக மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிறந்தார். இவரை இவரது குடும்பத்தினர் வினுபாய் என அழைக்கிறார்கள். வேளாண்மையில் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட விரும்பினார், யோகி மகராஜிடம் தீட்சை பெற்றார்.












Click it and Unblock the Notifications