நேருவுக்கு பின் 3வது முறையாக பிரதமர்! 10 வருடம் தேசிய அரசியலை புரட்டி போட்ட நரேந்திர மோடி- யார் இவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் தலைவர் என்ற சாதனையை மோடி படைத்துள்ள நிலையில், அவரது கடந்த காலம் குறித்து நாம் பார்க்கலாம்.

குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தேசிய அரசியல் தன்னை சுற்றியே இருக்கும்படி வைத்துள்ளார். இன்று மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

Narendra Modi oath ceremony BJP NDA cabinet ministers

மோடி: நரேந்திர மோடி கடந்த 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பிறந்தவர்.. குஜராத் மாநிலத்தில் உள்ள வாட்நகர் என்ற பகுதியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தான் நரேந்திர மோடி.. அவர் தனது இளமைப் பருவத்தில் தேநீர்க் கடையில் வேலை செய்ததாகக் கூறப்படுகிறது. இளமைக் காலத்திலேயே அவருக்கு ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 1970களின் முற்பகுதியில் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்துள்ளார்.

குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இளைஞர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அதாவது ஏபிவிபி பிரிவில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். அங்கு அவர் கற்றுக் கொண்ட இந்துத்துவ அரசியல் கொள்கைகள் பிற்காலத்தில் அவருக்குப் பெரியளவில் உதவியாக இருந்துள்ளது.

பாஜக: கடந்த 1987இல், அவர் பாஜகவில் இணைந்தார். மோடியின் கடின உழைப்பு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவருக்கு இருந்த தொடர்புகள் குறுகிய காலத்தில் அவருக்குக் குஜராத் பாஜகவில் முக்கிய பதவிகளைப் பெற்றுக் கொடுத்தது. பாஜகவில் சேர்ந்த அடுத்தாண்டு அதாவது 1988இல் அவர் குஜராத்தில் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1990இல் அங்குக் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்த நிலையில், அதில் நரேந்திர மோடியின் பங்கு முக்கியமாக இருந்தது. அந்த முறை பாஜக பிரச்சாரத்தை வடிவமைத்ததில் மோடி முக்கிய பங்கு வகித்தார்.. குறிப்பாக அவரது மிகத் தீவிரமா பிரச்சாரம் மக்களிடையே பெரிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. பாஜக தலைவர்களும் அதைக் கவனிக்கத் தவறவில்லை. குஜராத்தில் பாஜக இப்போது இந்தளவுக்கு வலுவாக இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டதே அந்தத் தேர்தல் தான்.

குஜராத் முதல்வர்: தொடர்ந்து 1995இல் நடந்த தேர்தலில் அங்கு பாஜக வென்ற நிலையில், கேசுபாய் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், 2001இல், முதல்வர் கேசுபாய் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குஜராத் முதல்வராக மோடி நியமிக்கப்பட்டார். மோடி அரசு பொறுப்பில் வந்தது அதுவே முதல்முறை. நேரடியாகக் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

குஜராத் முதல்வராக அவர் சுமார் 12 ஆண்டுகள் இருந்த நிலையில், அவரது பதவிக்காலத்தில் குஜராத் வளர்ச்சியில் பல சாதனைகளைப் படைத்தது. அதேநேரம் சர்ச்சைகளும் மிகப் பெரியளவில் இருந்தது. குறிப்பாக அவர் பதவி ஏற்ற அடுத்தாண்டே கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. இதை அவர் கையாண்ட விதம் குறித்து பெரியளவில் விமர்சனங்களும் எழுந்தன.

அதேநேரம் பொருளாதார மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் மோடி தலைமையிலான குஜராத் அரசு தனி முத்திரை பதித்தது. இதைக் குஜராத் மாடல் என்றே குறிப்பிடத் தொடங்கினர்.

தேசிய அரசியல்: குஜராத்தில் அவருக்கு அசைக்க முடியாத செல்வாக்கு இருந்த நிலையில், அதை தேசியளவிலும் பயன்படுத்த பாஜக முடிவு செய்தது. மெல்லத் தேசிய அரசியலில் தனது செல்வாக்கை மோடி அதிகரித்தார். குறிப்பாகக் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவற்றை முன்னிறுத்தி அப்போது அவர் பிரச்சாரம் செய்தார்.

கடந்த 2014 தேர்தலில் நாடு முழுக்க மோடி அலை வீசிய நிலையில், பாஜக 282 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறை.. சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸைத் தவிர்த்து ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதும் இதுவே முதல்முறையாகும்.

பிரதமராக மோடி: மோடி தனது முதல் ஆட்சிக் காலத்தில், ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா), மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை முயன்றார். கறுப்புப் பணம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தார். இது பெரும் விமர்சனங்களைக் கிளப்பி இருந்தது. அதேநேரம் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்.

இருப்பினும், 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் மாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மை உடன் வெல்வதை இது தடுக்கவில்லை.. 303 சீட்களில் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் 370வது பிரி ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கை இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது.

இந்தச் சூழலில் தான் 2024 லோக்சபா தேர்தலையும் பாஜக மோடி தலைமையில் எதிர்கொண்டது. கடந்த இரண்டு முறைகளை போலத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் 240 சீட்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இப்போது மோடி மூன்றாவது முறையாக நமது நாட்டின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+