புதின் மீது விமர்சனம்.. உக்ரைனுக்கு சப்போர்ட்! இந்தியாவில் மர்ம மரணம்.. யார் இந்த பாவெல் அன்டோவ்
டெல்லி: பிறந்த நாளை கொண்டாட வந்த ரஷ்ய எம்பி பாவெல் அன்டோவ் மர்மமான முறையில் 3ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. யார் இந்த பாவெல் அன்டோவ்? அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
Recommended Video
கடந்த 2000 முதலே ரஷ்யாவின் பவர்புல் தலைவராக உள்ளவர் புதின். அந்நாட்டுச் சட்டம் காரணமாக இடையில் நான்கு ஆண்டுகள், அவர் அதிபர் பதவியில் இருந்து விலகி, பிரதமர் பதவியில் இருந்தார். இருப்பினும், பவர் தன்னிடம் இருக்கும்படியே பார்த்துக் கொண்டார்.
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் என்ற போதிலும், அது வெறும் பெயரளவிலேயே இருக்கும். புதினும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பார்கள்.

ரஷ்ய எம்பி உயிரிழப்பு
மேலும், தன்னை எதிர்ப்பவர்களைச் சத்தமில்லாமல் காலி செய்வதையும் புதின் வழக்கமாகக் கொண்டுள்ளார். உலகே பார்த்துக் கொண்டிருந்த போதுதான், அலெக்ஸ் நவால்னி என்ற புதின் எதிர்ப்பாளர் மீது கொலை முயற்சி நடந்தது. அதில் இருந்து அவர் தப்பிய போதிலும், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சூழலில் இந்தியாவில் தனது பிறந்த நாளை கொண்டாட வந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதான பாவெல் அன்டோவ் என்பவர் ஒடிசாவின் ராயகடா பகுதியில் உள்ள ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

போலீசார் விளக்கம்
ரஷ்ய எம்பியான பாவெல் அன்டோவ் தனது 66ஆவது பிறந்த நாளை கொண்டாட இந்தியா வந்திருந்தார். அவருடன் வந்த விளாடிமிர் பிடெனோவ் (62) என்பவர் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அதே ஹோட்டலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் இவரும் உயிரிழந்துள்ளார். அவர் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ள ஓடிசா போலீசார், இதில் சந்தேகம் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

யார் இவர்
அன்டோவ் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து விழுந்தாரா அல்லது நண்பரின் மரணத்தால் மனமுடைந்த தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அது சரி யார் இந்த பாவெல் அன்டோவ். ரஷ்யாவில் இவர் என்ன செய்து கொண்டிருந்தார். இவரது திடீர் மரணம் ஏன் பேசுபொருளாகியுள்ளது என்பதைப் பார்க்கலாம். பாவெல் அன்டோவ் ஒரு ரஷ்ய இறைச்சி தொழிலதிபர் ஆவர். ரஷ்யாவில் அதிக இறைச்சி உற்பத்தி செய்யும் "விளாடிமிர் ஸ்டாண்டர்ட்" என்ற நிறுவனத்தை இவர் தொடங்கி நடத்தி வருகிறார். அதேநேரம் இவர் தொழிலதிபர் மட்டுமில்லை அரசியல்வாதியும் கூட...

அரசியல்வாதி
அவர் விளாடிமிர் பிராந்தியத்தின் சட்டசபை துணைத் தலைவராக இருந்தார். விளாடிமிர் பிராந்தியத்தின் விவசாயம், இயற்கை மேலாண்மை மற்றும் சூழலியல் தொடர்பான கொள்கை முடிவை எடுக்கும் குழுவின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார். அங்கு அதிகம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகளில் ஒருவராகவே இந்த பாவெல் அன்டோவ் இருந்துள்ளார். கடந்த 2019இல் இவரது வருமானம் 130 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1,200 கோடியாக இருந்துள்ளது. அந்தளவுக்கு மிகப் பெரிய செல்வந்தராக இவர் இருந்துள்ளார்.

புதின் எதிர்ப்பு
அதேநேரம் ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கைகளைக் கடந்த சில காலமாகவே இவர் வெளிப்படையாக விமர்சித்து வந்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அவர் வெளிப்படையாகவே எதிர்த்துள்ளார். கடந்த ஜூன் மாதம் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை விமர்சித்த அவர், "சிறுமி இடிபாடுகளுக்கு அடியில் இருந்து வெளியே எடுக்கப்படுகிறார். அவரது உயிரிழந்த தந்தை மற்றும் தாயின் சடலங்கள் எடுக்கப்படுகிறது... உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதைப் பயங்கரவாதம் என்றே அழைக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரஷ்யாவில் மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனால் அவர் தனது போஸ்டையே டெலிட் செய்துவிட்டார்.

நடந்தது என்ன
ஒடிசா போலீசார் தகவல்படி, பிடெனோவ் மற்றும் அன்டோவ் உள்ளிட்ட 4 பேர் இந்தியாவுக்கு சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். அவர்கள் டிசம்பர் 21ஆம் தேதி அன்று ராயகடாவில் ஹோட்டலுக்குச் சென்றனர். அவர்கள் கந்தமால் மாவட்டத்தில் உள்ள டேரிங்பாடியிலிருந்து ராயகடாவுக்குச் சென்றுள்ளனர். இப்படி திடீரென அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மற்ற இரு நண்பர்களை இந்தியாவிலேயே தங்கி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகம்
அதேநேரம் புதினை வெளிப்படையாக எதிர்த்த ஒருவர் ரஷ்யாவுக்கு வெளியே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர்கள் உண்மையிலேயே எதிர்பாராத விதமாகத் தான் உயிரிழந்தனரா அல்லது அவர்கள் மரணத்தில் மர்மம் உள்ளதா எனப் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications