டாப்பில் ராகுல்! பின்தங்கிய ஸ்டாலின்.. ‛இந்தியா’ கூட்டணியில் பிரதமராக தகுதியானவர் யார்? சர்வே முடிவு
டெல்லி: ‛இந்தியா' கூட்டணியில் பிரதமராகும் தகுதி யாருக்கு உள்ளது? என டைம்ஸ்நவ்-இடிஜி சார்பில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் ராகுல் காந்தி முதலிடத்தில் உள்ளார். இந்த சர்வேயில் 5வது இடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அதற்கான களம் என்பது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மாநிலம் வாரியாக மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அநேகமாக அடுத்த மாதம் தேர்தல் தேதி என்பது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.
‛இந்தியா' கூட்டணி என்பது காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி உள்பட 28 கட்சிகள் இணைந்து உருவானது. இந்த கூட்டணி அமைய அடித்தளமாக இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் சமீபத்தில் வெளியேறினார். இதையடுத்து தற்போது 27 கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் உள்ளன.
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமர் மோடி தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார். ஆனால் ‛இந்தியா' கூட்டணியை பொறுத்தமட்டில் பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த கூட்டணியில் பிரதமர் பதவி மீது பல்வேறு தலைவர்கள் கண்வைத்துள்ளனர். நிதிஷ் குமார் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்ற கோபத்தில் தான் கூட்டணியை முறித்து பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
நிதிஷ் குமாரை தற்போது வெளியேறி உள்ள நிலையில் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என விரும்புகிறது. அதேபோல் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் பிரதமர் வேட்பாளராக தங்களை அறிவிக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் கூட சேலம் இளைஞர் அணி மாநாட்டில் பிரதமர் பொறுப்பு தேடிவந்தால் ஸ்டாலின் நிச்சயம் ஏற்க வேண்டும். அதனையும் ஒரு கை பார்ப்போம் என பேசினார். இப்படி பிரதமர் வேட்பாளர் மீது பலருக்கும் ஆசை உள்ளதால் தான் ‛இந்தியா' கூட்டணி சார்பில் இன்னும் பிரதமர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியில் இருந்து பிரதமர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது பற்றி டைம்ஸ்நவ் -இடிஜி சார்பில் சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு அதிகளவில் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று 19 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். அவருக்கு 15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3வது இடத்தில் கெஜ்ரிவால் இருக்கிறார். அவருக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா (உத்தவ் அணி) தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு 8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த வரிசையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் 5வது இடத்தில் உள்ளார். ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என்று 6 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சர்வேயில் 40 சதவீதம் பேர் மேற்கூறிய தலைவர்களில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்களாக நினைக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளதாக டைம்ஸ்நவ்-இடிஜி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications