மோடி டூ ஸ்டாலின் வரை.. "ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டு".. பிரஷாந்த் கிஷோரின் அறியப்படாத ஹிஸ்டரி
டெல்லி: குஜராத்தில் தேர்தல் ஆலோசகராக தனது பணியை தொடங்கிய பிரஷாந்த் கிஷோர் தற்போது நாடு முழுக்க 6 முதல்வர்களையும், ஒரு பிரதமரையும் வெற்றிபெற வைத்த அரசியல் மாஸ்டர் மைண்டாக பார்க்கப்படுகிறார். வெறும் 42 வயதில் இந்தியா அரசியலில் மிக முக்கிய நபராக பிரஷாந்த் கிஷோர் உருவெடுத்துள்ளார். திமுகவிற்காக தேர்தல் ஆலோசனைகளை வழங்கிவரும் பிரஷாந்த் கிஷோர் தமிழக அரசியல் புயலை கிளப்பி உள்ளார்.. யார் இந்த பிரஷாந்த் கிஷோர்?
Recommended Video
''ஒரு பிராண்ட் சரியாக இல்லையென்றால்.. எந்த விதமான கவர்ச்சி வார்த்தைகள் மூலமும் அதை விற்க முடியாது''... 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த போது, ராகுல் காந்தி குறித்து பிரஷாந்த் கிஷோர் கூறிய வார்த்தைகள் இவை. ஆம்.. இந்திய அரசியல் என்பதை ஒரு பிராண்ட் விற்பனை போல மாற்றியவர்தான் இந்த பிரஷாந்த் கிஷோர்.
ஒரு குதிரைக்கு போதுமான பயிற்சி கொடுத்து, அதை போட்டியில் ஓட வைத்து அதன் மீது பந்தயம் கட்டி வெல்வது ஒரு வகை.. அதே சமயம் வெற்றிபெறும் குதிரை மீது நேரடியாக பந்தயம் கட்டுவது இன்னொரு வகை. இதில் பிரஷாந்த் கிஷோர் இரண்டாவது வகையை சேர்ந்தவர்.

வெற்றிபெறும் குதிரைகள்
2012ல் மோடியின் குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம், 2014ல் மோடியின் லோக்சபா தேர்தல் பிரச்சாரம், 2015ல் நிதிஷ் குமாரின் பீகார் சட்டமன்ற பிரச்சாரம், 2017ம் வருடம் அம்ரீந்தர் சிங்கிற்காக பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம், அதே வருடம் ராகுல் - அகிலேஷ் கூட்டணிக்காக உத்தர பிரதேசம் பிரச்சாரம், கடந்த வருடம் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆந்திர சட்டசபை தேர்தல், சிவசேனாவிற்காக மகாராஷ்டிரா தேர்தல், மமதாவிற்காக உள்ளாட்சி தேர்தல், கெஜ்ரிவாலுக்காக 2020 சட்டசபை தேர்தல் என்று 9 தேர்தல்களில் பிரச்சார மற்றும் கூட்டணி யுக்திகளை வகுத்துக் கொடுத்தவர்தான் பிரஷாந்த் கிஷோர்.. 9 தேர்தலில் 8 தேர்தலில் இவரின் ''பிகே மாடல்'' வெற்றிபெற்றது.. இந்த 8 தேர்தலிலும் இவர் பந்தயம் வைத்தது வெற்றிபெறும் குதிரைகள் மீது!

யார் இந்த பிகே?
இப்படி தேர்தலில் பெரிய கட்சிகளுக்கு திட்டங்களை வகுத்து கொடுக்கும் இந்த பிகே யார்? வெறும் பிரஷாந்த் கிஷோர் பிகேவாக மாறியது எப்படி? எப்போது? உண்மையில் இவரின் அரசியல் திட்டங்கள், செயல்பாடுகள் வெற்றிபெறுகிறதா? என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். பிரஷாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியது 2010ல்தான். ஆம் வெறும் 10 வருடங்களில் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத நபராக இவர் மாறியுள்ளார்.
2010ல் பிரதமர் மோடி.. குஜராத் முதல்வராக இருந்தார். 2012ல் நடக்க போகும் சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறை வெற்றிபெறுவதற்காக மோடி தீவிரமாக முயன்று கொண்டு இருந்தார். இந்த வெற்றி தன்னை எதிர்காலத்தில் பிரதமராக்கும் என்ற கனவு மோடிக்கு இருந்தது. இதனால் தங்களால் முடிந்த விஷயங்களை எல்லாம் செய்து 2012 குஜராத் சட்டசபை தேர்தலில் வெல்ல மோடி - அமித் ஷா இணை திட்டமிட்டது. அப்போது மோடி வாய்ப்பு கொடுத்த நபர்தான் பிரஷாந்த் கிஷோர்.

இளைஞருக்கு வாய்ப்பு
அப்போது வெறும் 32 வயதே இவருக்கு ஆகி இருந்தது. ஐநாவில் சுகாதாரம் தொடர்பான குழு ஒன்றில் பணியாற்றி வந்தவருக்கு அரசியல் வாய்ப்பை அப்போது மோடி கொடுத்தார். என்னுடைய டேட்டா சைன்ஸ் (data science) நுட்பத்தை உங்கள் அரசியல் பிரச்சாரத்தில் புகுத்துகிறேன்.. கண்டிப்பாக உங்களுக்கு இது உதவி செய்யும் என்று பிரஷாந்த் கிஷோர் வாக்கு அளித்து இந்த வாய்ப்பை பெற்றதாக குஜராத் பாஜகவினர் தெரிவிக்கிறார்கள். ஆம், சிறிய அரசியல் ஆலோசகராகவே இவர் தனது பணியை தொடங்கி உள்ளார்.

டேட்டா புலி
இந்த டேட்டாக்களை வைத்து மோடியின் பிரச்சாரங்களை வடிவமைத்தவர்தான் பிரஷாந்த் கிஷோர். பிரஷாந்த் கிஷோரின் அந்த வொர்க்கிங் ஸ்டைல் மோடிக்கு பிடித்து போனது. மோடியிடம் ''குட் பாய்'' பாராட்டு பெற்றார். அதோடு தனது குஜராத் பிரச்சார யுக்தியை பிரஷாந்த் கிஷோரின் அறிவுரைக்கு ஏற்றபடி மொத்தமாக மோடி மாற்றினார். ஆனால் இதெல்லாம் நடந்தது திரை மறைவில். அப்போது பிரஷாந்த் கிஷோரை குஜராத் பாஜகவினர் பலருக்கும் கூட தெரியாது.

சிஏஜி தொடங்கினார்
பிரஷாந்த் கிஷோரின் திட்டங்கள், பிரச்சார யுக்திகள் பெரிய ஹிட் அடித்தது. கிடைத்தது கை மேல் பலன். அந்த தேர்தல் வெற்றி மூலம் பாஜகவிற்கு பிரஷாந்த் கிஷோர் நெருக்கம் ஆனார். இன்னொரு பக்கம் தனது தேர்தல் ஆலோசகர் கனவை பிரஷாந்த் கிஷோர் முழுதாக செயலுக்கு கொண்டு வர தொடங்கினார். இதற்காக பிரஷாந்த் கிஷோர் தொடங்கியதுதான் சிஏஜி. மத்தியில் தணிக்கை பணிகளை செய்யும் சிஏஜி அல்ல இது. இது பொறுப்பான அரசுக்கான மக்கள் குழு (Citizens for Accountable Governance) என்னும் பொருள் கொண்ட அரசியல் ஆலோசனை இயக்கம் ஆகும்.
இந்த குழுவை பிரஷாந்த் கிஷோர் தொடங்கியதற்கு காரணமே, 2014 லோக்சபா தேர்தல்தான். அந்த தேர்தலில் பிரதமர் மோடிக்காக இவர் அரசியல் ஆலோசனை செய்ய போகிறார் என்று அப்போதே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதற்காக அவர் உருவாக்கியதுதான் இந்த சிஏஜி. இந்த குழுவின் அப்போதை ஒரே புராஜெக்ட் மோடி இமேஜை மாற்றுவது மட்டும்தான். மோடிக்காக தேர்தல் ஆலோசனைகளை வழங்குவது.

இவர் ஒரே நபர் கிடையாது
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது மோடியின் வெற்றிக்கு காரணம் பிரஷாந்த் கிஷோர் மட்டும் இல்லை. ஏனென்றால் ''ஆப் கி பார் மோடி சர்க்கார்'' என்ற வாசகத்தை பிரஷாந்த் கிஷோர் உருவாக்கவில்லை. ''குஜராத் மாடல்'' என்ற பிரயோகத்தை பிரஷாந்த் கிஷோர் உருவாக்கவில்லை. பாஜக அந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இவர் ''முழுமையாக'' உருவாக்கவில்லை. இதை எல்லாம் உருவாக்கிய think tank எனப்படும் சிந்தனை குழுவில் பிரசாந்த் கிஷோரின் சிஏஜி ஒரு அங்கமாக இருந்தது அவ்வளவுதான்.. இந்த குழுவை உருவாக்கியது அமித் ஷா!
இந்த 2014 தேர்தலில் பிரஷாந்த் கிஷோருக்கு இரண்டு வேலைகள் கொடுக்கப்பட்டது. ஒன்று மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாடு முழுக்க சர்வேவாக எடுத்து அதை டேட்டா போல மாற்றி, அதன்மூலம் தேர்தல் வாக்குறுதிகளை வகுப்பது. மோடி ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன பேச வேண்டும் என்பதை உருவாக்க முக்கிய காரணமாக இருந்த மூளைதான் பிரஷாந்த் கிஷோர். ஆனால் அவர் மட்டுமே மோடிக்கு ஆதியும் அந்தமுமாக இல்லை.இரண்டாவது மோடியின் இமேஜை மாற்றி... பிராண்ட் மோடியை உருவாக்குவது!

இரண்டு வேலைகள்
மோடியின் இமேஜை மாற்ற இவர் மேற்கொண்ட இரண்டு வேலைகள் இப்போதும் அரசியல் சாணக்யத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒன்று.. 2013ல் மோடி என்று தேடினால் கூகுளில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ விவரங்கள் வரும். மோடிக்கு எதிராக இருந்த இந்த கெட்ட இமேஜ் பாஜவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த கூகுள் ரிசல்ட்டை உடைத்தவர்தான் பிரஷாந்த் கிஷோர். எஸ்இஓ தொழில்நுட்பம் தொடங்கி மோடிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இணையத்தில் ஏற்றி, கோத்ரா ரயில் எரிப்பு தகவல்களை கூகுளில் பின்னோக்கி கொண்டு சென்று, குஜராத் மாடலை முன்னோக்கி கொண்டு வந்தவர் தான் பிரஷாந்த் கிஷோர்.
அதேபோல் மூத்த செய்தியாளர் கரன் தாப்பரின் பேட்டி ஒன்றில் மோடி பதில் அளிக்க முடியாமல் திணறிய வீடியோ மோடிக்கு எதிராக வைரலானது. இதில் மோடி, அர்ஜுனிடம் சிக்கிய முதல்வர் ரகுவரன் போல திக்கி தண்ணீர் குடிப்பார். இந்த வீடியோவை மோடியிடம் போட்டு காட்டிய பிரஷாந்த் கிஷோர், மோடியிடம் எப்படி பேச வேண்டும், எப்படி பதற்றத்தை முகத்தில் காட்ட கூடாது என்று சொல்லிக்கொடுத்தார். முப்பது முறை இந்த வீடியோவை மோடியிடம் காட்டி, மோடி எங்கு தவறு செய்கிறார் என்று, பிரஷாந்த் கிஷோர் அவருக்கு டிரெயினிங் கொடுத்து உள்ளார். அந்த அளவிற்கு இமேஜை உருவாக்குவதில் பிரஷாந்த் கிஷோர் வல்லவர்.

உருவானார் பிகே!
மற்றபடி மோடியின் 2014 வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோர் மட்டும் காரணம் இல்லை. இந்த தேர்தலில் மோடி வெற்றிபெற்ற பின் மூன்று செய்திகள் இணையம் முழுக்க பேசப்பட்டது. ஒன்று மோடியின் குஜராத் மாடல் எப்படி இருக்கும். இன்னொன்று அமித் ஷாதான் பாஜக தலைவரா? மூன்றாவது விஷயம்தான் பிரஷாந்த் கிஷோர்!இந்தியா முழுக்க அரசியல் தலைவர்கள் பலர் யார் இந்த 36 வயது இளைஞர் என்று பிரஷாந்த் கிஷோர் பெயரை தேட தொடங்கினார்கள். யார் இந்த இமேஜ் ஸ்ட்ரேட்டஜி மாஸ்டர் மைண்ட் என்று தேடினார்கள்... அந்த வெற்றிக்கு பின்தான் பீகாரின் பிரஷாந்த் கிஷோர் பிகே ஆனார்!
இந்த வெற்றி காரணமாக இருந்த சிஏஜி அதன்பின் கலைக்கப்பட்டது. மொத்தமாக புதிய குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுதான் ஐ பேக். எந்த உறுப்பினரும் இல்லாமல் சில நடத்துனர்கள் மட்டுமே இருக்கும் வகையில் இந்த குழு உருவாக்கப்பட்டது. இந்த லோக்சபா தேர்தலுக்கு பின் பிகே பாஜகவுடன் லேசான உரசலை சந்தித்தார். 2014 தேர்தலில் நிறைய பணத்தை பிகே செலவு செய்துவிட்டார் என்று புகார்களும் கூட வைக்கப்பட்டது. அதோடு அதற்கு அடுத்து 2015ல் நிதிஷ் குமார் - லாலு கூட்டணிக்காக பிகே வேலை பார்த்து, நிதிஷை வெற்றிபெறவும் வைத்தார்.

பீகார் தேர்தல்
இந்த பீகார் தேர்தலில்தான் பிகேவின் ஆட்டத்தை இந்தியாவே பார்த்தது. ஒரு கட்சிக்குள் தேர்தல் ஆலோசகர் எப்படி எல்லாம் முடிவுகளை எடுக்க முடியும் என்று பிகே நிரூபித்தார். நிதிஷ் குமார் - லாலுவின் கூட்டணிக்கு வழி வகுத்தது இவர்தான். எந்த தொகுதியில் யாரை நிற்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தது இவர்தான். எத்தனை இடங்களை கூட்டணிக்கு கொடுக்க வேண்டும் என்பது தொடங்கி எங்கு என்ன பேச வேண்டும் என்பதையும் இவர்தான் தீர்மானித்தார். அந்த தேர்தலில் நிதிஷ் குமார் கூட்டணி வெற்றிபெற்று, நிதிஷ் முதல்வராக மாறினார்.
இவர் வெறும் ஸ்லோகன் மட்டும் உருவாக்கும் அரசியல் ஆலோசகர் இல்லை. எப்படி கூட்டணி அமைப்பது, எப்படி முதல்வர் வேட்பாளர் இமேஜை உருவாக்குவது. யாருக்கு எங்கு நிற்க இடம் கொடுப்பது, உட்கட்சி அரசியலில் யாருக்கு பொறுப்புகளை வழங்குவது, மாவட்ட செயலாளர்களில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது, யாரை தூக்குவது, தொகுதி பணிகளை வீடு வீடான பிரச்சாரங்களை எப்படி செய்வது என்று அனைத்தையும் இவர்தான் தீர்மானிக்கிறார்.

எப்போது சின்ன டீம்தான்
இதற்காக தான் வேலை பார்க்கும் மாநிலங்களில் 100க்கும் குறைவான நபர்கள் கொண்ட டீமை வைத்து இருக்கிறார். இதில் பலர் முன்னாள் பத்திரிகையாளர்கள். சிலர் டேட்டா புலிகள். டேட்டா சேகரிப்பது, சோஷியல் மீடியாவில் பிரச்சாரம் செய்வது, களத்தில் இறங்கி தகவல்களை சேகரித்து, மக்களின் மனதை புரிந்து கொள்வது, சட்ட ரீதியான எதிர்ப்புகளை சமாளிப்பது, எதிரிகளை அமைதியாக்குவது என்று இவர் செய்யாத பணிகளே இல்லை.
உதாரணமாக பீகார் தேர்தலுக்காக இவரின் 350 பேர் கொண்ட குழு வீடு வீடாக சென்று டேட்டா பெற்று தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்தது. நிதிஷின் நிச்சயமான வாக்குறுதிகள் என்று பொருள்படும் வகையில் 12+ வாக்குறுதிகளை உருவாக்கினார். இதில் பீகாரில் சாலை போடப்படும் (இந்தியில் நாலி காலி வாக்குறுதி) என்று வாக்குறுதியும் அடக்கம். இந்த 12+ முக்கியமான வாக்குறுதியும், அங்கு மக்களிடம் பெறப்பட்ட டேட்டா மூலம் உருவாக்கப்பட்டது. இந்த 12+ வாக்குறுதிதான் நிதிஷ் வெற்றிக்கும் அந்த தேர்தலில் காரணமாக இருந்தது.

வாக்குறுதியை நிறைவேற்றினார்
இவர் தேர்தலுக்கு பின்பும் தான் பணியாற்றிய கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர். பீகாரில் நிதிஷ் குமாரின் 12+ கோரிக்கையையும் நிறைவேற்ற, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வைத்தார். அதேபோல் பஞ்சாப்பில் அம்ரீந்தர் சிங் கொடுத்த ''கேப்டன் வாக்குறுதிகள்'' அனைத்தையும் நிறைவேற்ற சட்டங்களை கொண்டு வர வைத்தார், மேலும் ஆந்திராவில் ஜெகனின் முதல் பட்ஜெட்டில் 80% நிதி ஒதுக்கீடு பிரஷாந்த் கிஷோர் உருவாக்கி கொடுத்த தேர்தல் வாக்குறுதி திட்டங்களை மையமாக வைத்தே அமைந்து இருந்தது .
பீகாரின் பட்ஜெட்டிலும் 65% அறிவிப்பு பிகேவின் வாக்குறுதி திட்டங்களை அடிப்படையாக வைத்தே இருந்தது. மொத்தத்தில் இவர் வெறுமனே கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே உருவாக்கவில்லை. அந்த கவர்ச்சி அறிவிப்புகள் செயலுக்கு வருகிறதா என்பதை அருகே இருந்து பார்க்கிறார். அதை செயலுக்கு கொண்டு வர மாநில அரசுக்கு அழுத்தம் தருகிறார். இதை செய்தால்தான் அடுத்த தேர்தலில் நீங்கள் வெற்றிபெற முடியும் என்று அழுத்தம் தருகிறார். அதாவது மக்களால் தேர்வு செய்யப்படாத அரசியல் ஆலோசகர், மாநில அரசின் பட்ஜெட்டில் தலையிடும் அளவிற்கு சக்தி படைத்தவராக இருக்கிறார்!

தோல்வி வரலாறு
ஆனால் முழுக்க முழுக்க இவர் வெற்றியாளர் மட்டுமே என்று கூறிவிட முடியாது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்காக 2017ல் இவர் வேலை பார்த்து அதில் தோல்வி அடைந்தார். அப்போது ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அழுத்தம் கொடுத்தது இவர்தான். அது கடைசியில் தோல்வியில் முடிந்தது. இது காங்கிரஸ் - அகிலேஷ் யாதவ் இருவருக்கும் பெரிய அரசியல் வீழ்ச்சியாக மாறியது.
பீகாரில் இவர் அமைத்து கொடுத்த நிதிஷ் - லாலு கூட்டணி வேகமாக முறிந்தது. இவர் தான் கைப்பட தேர்வு செய்யும் சில வேட்பாளர்கள் தோல்வி அடைகிறார்கள். உட்கட்சி அரசியலில் இவர் தலையீடு காரணமாக கட்சிக்குள் பெரிய மோதல்கள், அதிருப்திகள் எழுகிறது. அதேபோல் இவர் வெற்றி உறுதி என்னும் கட்சியை மட்டுமே தேர்வு செய்து உழைப்பது நிறைய விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் திமுக
தற்போது திமுகவிற்காக இவர் தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். பீகார் தேர்தலில் நிதிஷுக்கு எதிராக கிராமம் கிராமமாக இளைஞர்களிடம் பிரச்சாரம், மேற்கு வங்கத்தில் மமதாவிற்காக ஆலோசனை, இங்கு ஸ்டாலினுக்கு ஆலோசனை என்று மிகவும் பிசியாக இருக்கிறார். தமிழகத்தில் இவரின் பணிகளை சிலர் மிகைப்படுத்தி கூறி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. திமுகவின் தேர்தல் திட்டங்களை எல்லாம் பிகேதான் போட்டுக்கொடுத்தார் என்ற மிகை பிம்பம் உள்ளது.

இனி என் நடக்கும்?
இப்படிபட்ட தேர்தல் ஆலோசகர் டிரெண்டை தவறு என்றும் சொல்ல முடியாது. அமெரிக்கா, கனடாவில் எல்லாம் வழக்கமாக இருக்கும் முறைதான். அதிலும் அமெரிக்க தேர்தல் முழுக்க முழுக்க இப்படிப்பட்ட நபர்களை நம்பியே இருக்கிறது. இவ்வளவு நாள் இந்தியா, மெட்ராஸ் பற்றி வாய் திறக்காத அமெரிக்க ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இப்போது இந்தியா பற்றி பேசுவதும் கூட பிடனின் தேர்தல் ஆலோசகர் கொடுத்த ஆலோசனையால்தான் (இந்தியர்களின் வாக்குகளை கவர).
ஆக மொத்தம் பிரஷாந்த் கிஷோர் நல்லவரோ, கெட்டவரோ.. கண்டிப்பாக தவிர்க்க முடியாதவர். மோடியிடம் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பிரஷாந்த் கிஷோர் பிகேவாக வளர்ந்து தற்போது அதே மோடியை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். சிஏஏ காரணமாக மோடிக்கு எதிராக பிகே கொதித்து போய் இருக்கிறார். இதனால் பாஜகவும் இவரை முடக்க திட்டமிட்டுள்ளது. வழக்கமாக வெல்லும் குதிரை மீது பந்தயம் காட்டும் பிகே தற்போது ஸ்டாலின் மீது பந்தயம் கட்டி இருக்கிறார்.. பார்க்கலாம் குதிரை வெல்லுமா என்று!
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications