முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு: எப்ஐஆர் போடாதது ஏன்? டெல்லி போலீசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) பதிவு செய்ய 5 மாதக்கால தாமதம் ஏன்? என்று டெல்லி போலீஸாரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர்.
மேலும், இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
நீதிபதிகளின் இந்த காட்டமான கேள்விகளை சற்றும் எதிர்பாராத டெல்லி போலீஸார் என்ன சொல்வதென தெரியாமல் விழித்தனர்.
டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'இந்து யுவ வாஹினி' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சுதர்சன் தொலைக்காட்சி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹான்கே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பலரும் பேசினர். இதில் முஸ்லிம்களை நமது சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ரீதியில் சில இந்து மதத் தலைவர்கள் பேசினர். இந்த பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையங்களில் ஏராளமானோர் புகார் அளித்தனர். எனினும், காவல்துறை பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இந்த விவகாரம் குறித்து டெல்லி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், "இந்நிகழ்ச்சியில் சட்டத்துக்கு புறம்பாக யாரும் பேசவில்லை" என போலீஸார் தெரிவித்திருந்தனர். டெல்லி போலீஸாரின் இந்த பதிலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடியிருந்தனர். அதன் பிறகு, கடந்த ஆண்டு மே மாதம் இதுதொடர்பாக நீதிபதிகள் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு பிறகு டெல்லி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்ததை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் துஷார் காந்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி போலீஸார் நோக்கி நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். "சம்பவம் நடந்து 5 மாதங்களுக்கு பிறகு எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறீர்களே.. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்" எனக் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த டெல்லி போலீஸார், "நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தியதால் தாமதம் ஏற்பட்டது" எனத் தெரிவித்தனர். ஆனாலும் விடாத நீதிபதிகள், "சரி.. எப்ஐஆர் பதிவு செய்யதான் தாமதம் ஆகிவிட்டது. எப்ஐஆர் போட்டே 8 மாதங்கள் கடந்துவிட்டதே.. இத்தனை மாதங்களாக இந்த வழக்கில் போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தது? எத்தனை பேரை கைது செய்துள்ளது? யார் யாரிடம் விசாரணை நடந்திருக்கிறது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் திணறினார். அதன் பிறகு, போலீஸார் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக அவர் உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications