நாடே உலக கோப்பை பைனல்ஸ் தான் பார்க்குது.. ஆனால் ஆனந்த் மகேந்திரா பார்க்க மாட்டாராம்.. ஏன் தெரியுமா
டெல்லி: கிரிக்கெட் மீது மிகப் பெரிய ஆர்வம் கொண்டுள்ள தொழிலதிபர் ஆனந்த் மகேந்திர உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க மாட்டாராம். இதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிறபகல் 2 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2011க்கு பிறகு நடக்கும் இந்தியாவில் நடக்கும் இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பமாக இருக்கிறது. பலரும் இந்தியா வெல்ல வேண்டும் என்று சிறப்புப் பூஜைகளையும் செய்து வருகிறார்கள்,
கிரிக்கெட் உலகக் கோப்பை: இப்படி ஒட்டுமொத்த தேசமே உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தான் ஒவ்வொரு பாலையும் விடாமல் ஆர்வமாகப் பார்த்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்து ரசித்து வருகிறார்கள். ஆனால், இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா இந்தப் போட்டியைப் பார்க்க மாட்டாராம். இந்திய ஜெர்சியை அணிந்து ஆதரவு கொடுத்தாலும் போட்டியைப் பார்க்க மாட்டாராம்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மகேந்திரா, இந்த தகவலை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அதற்கான காரணத்தையும் அவரே விளக்கியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இல்லை.. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை நான் பார்க்கப் போவதில்லை. ஆனால், உண்மையில், நான் இந்த ஜெர்சியை அணிந்துகொண்டு இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பேன்.
ஆனந்த் மகேந்திரா: இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு வெளியே உலகிற்குத் தொடர்பே இல்லாத ஒரு ரூமில் இருப்பேன். இந்தியா வெற்றி பெற்றுவிட்டது என்று யாரேனும் ஒருவர் கதவைத் தட்டி சொல்லும் வரை அங்கிருந்து நான் வெளியே வர மாட்டேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், உலகக் கோப்பை சமயத்தில் அவர் அணியப் போகும் ஜெர்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். 55 எண் கொண்ட அந்த ஜெர்சியில் ஆனந்த் என்று இருக்கிறது..

உலகமே இறுதிப் போட்டியைப் பார்க்கும் போது, கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ஆனந்த் மகேந்திரா ஏன் இறுதிப் போட்டியைப் பார்க்காமல் இருக்கிறார் என்ற கேள்வி உங்களுக்கு வரும். அதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. அதாவது தான் ஒரு போட்டியைப் பார்த்தால் அதில் இந்தியா வெற்றி பெறாது என்பது ஆனந்த் மகேந்திராவின் மூடநம்பிக்கை. இதன் காரணமாகவே அவர் இறுதிப் போட்டியைப் பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அவர் கடந்த காலங்களிலும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியாவின் முக்கிய போட்டிகளில் இதே கருத்துகளைப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த ட்வீட்டிற்கு கீழ் சென்று பார்க்கும் போது, அவரது பாலோயர்ஸ்களும் கூட இதையேதான் நம்புகிறார்கள். ஆனந்த் மகேந்திரா போட்டியை நேரலையில் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்றும் இதனால் போட்டியைப் பார்க்க வேண்டாம் என்றே அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். உலகக் கோப்பை இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்வீட்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications