"ரூ. 8 ஆயிரம் கோடி இமயமலை தங்கம்" இந்திய பகுதியில் சீனா அத்துமீற காரணமே வேற! வெளியான மூலிகை சீக்ரெட்
டெல்லி: இந்தியப் பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சீன ராணுவம் எதற்காக இப்படி அத்துமீறி நுழைகிறது என்பது குறித்து சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு எல்லையில் சமீப காலமாகவே சுமுக உறவு இருப்பதில்லை. ஒரு பக்கம் பாகிஸ்தான் நமக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது என்றால் மற்றொரு பக்கம் சீனாவின் அத்துமீறலும் அதிகரித்து வருகிறது.
இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாகச் சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அதிலும் கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை ரொம்பவே மோசமான ஒன்றாக மாறிவிட்டது.

எல்லை சூழல்
எல்லையில் இரு தரப்பும் ராணுவத்தைக் குவித்து வந்ததால் பதற்றமான ஒரு சூழலே நிலவி வந்தது. பல கட்ட ராணுவ பேச்சுவார்த்தைக்கு பின், மெல்ல இரு தரப்பும் படைகளும் வாபஸ் பெற தொடங்கின. இந்தச் சூழலில் அருணாச்சல பிரதேச எல்லையில், கடந்த டிச. 9இல் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியது. சுமார் 200க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்த நிலையில், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து அவர்களை விரட்டியடித்தது. இதில் இந்தியா தரப்பில் யாருக்கும் எந்தவொரு மோசமான பாதிப்பும் ஏற்படவில்லை.

புதிய அறிக்கை
கடந்த சில ஆண்டுகளில் சீன ராணுவம் இப்படிப் பல முறை அத்துமீறி இந்தியப் பகுதிகளில் நுழைந்துள்ளது. சீன ராணுவம் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க முயல்வதே இதற்குக் காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே இது தொடர்பாக ஐபிசிஎஸ்சி எனப்படும் இந்தோ-பசிபிக் மூலோபாய தகவல் தொடர்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீன ராணுவம் கம்பளிப்பூச்சி பூஞ்சை அல்லது இமாலயன் தங்கம் என்றும் அழைக்கப்படும் கார்டிசெப்ஸ் மூலிகை மருந்தைச் சேகரிக்கவே இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவ முயல்வதாகக் கூறப்படுகிறது.

மூலிகை
சீனாவில் இந்த கார்டிசெப்ஸ் மூலிகை தங்கத்தை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. சீன மருத்துவத்தில் இது அந்தளவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பூஞ்சை வகையைச் சேர்ந்த இந்த மூலிகையைத் தேடித்தான் அருணாச்சல பிரதேசத்திற்குள் சீன ராணுவம் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. கார்டிசெப்ஸ் பொதுவாகத் தென்மேற்கு சீனா மற்றும் இந்திய இமயமலையில் உள்ள உயரமான பகுதியில் காணப்படுகிறது. இதை எடுக்கவே சீன ராணுவம் நுழைந்ததாக இதில் கூறப்பட்டுள்ளது.

ரூ 8 ஆயிரம் கோடி
சர்வதேச அளவில் 2022ஆம் ஆண்டில் இந்த கார்டிசெப்ஸ் மூலிகையின் சந்தை 1,072.50 மில்லியன் டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 8 ஆயிரம் கோடியாகும் சீனா தான் இந்த கார்டிசெப்ஸ் மூலிகையின் மிகப் பெரிய உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் உள்ளது. சீனாவில் பொதுவாக கிங்காய் என்ற பகுதியில் தான் இந்த மூலிகை அதிகம் கிடைக்கும். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பகுதியில் அறுவடை குறைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்தியப் பகுதிகளில் அத்துமீறி வரும் சீன படைகள் ரகசியமாக இந்த மூலிகைகளை எடுக்க முயல்வதாக ஐபிசிஎஸ்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆதாரம் இல்லை
அறிவியல் பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் இல்லாத போதிலும், சீனா இந்த மூலிகையில் இருந்து சிறுநீரக கோளாறுகள் முதல் ஆண்மைக்குறைவு வரை அனைத்தையும் குணப்படுத்த முடியும் என நம்புகிறது. மாறி வரும் வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவு பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த மூலிகையின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிக தேவையும் குறைவான இருப்பும் அதிகப்படியான அறுவடைக்கும் விலை உயர்வுக்கும் காரணமாக அமைந்துவிட்டது. ஆண்டுக்கு சுமார் சில ஆயிரம் கிலோ மட்டுமே இது கிடைக்கும் என்பதால் இதன் விலை அதிகரித்து வருகிறது.

வாழ்வாதாரம் பாதிப்பு
இந்திய மதிப்பில் இந்த மூலிகை ஒரு கிலோ சுமார் 10 முதல் 12 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக இமயமலையில் பல கிராமங்களில் இந்த மூலிகை சேகரித்து விற்பதே முக்கிய வருமானமாக உள்ளது. அப்படியிருக்கும் நிலையில், சீன ராணுவம் அத்துமீறி நுழைவது பதற்றத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, இதுபோல பல கிராம மக்களின் வாழ்வாதாரத்தையே பாதிப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications