அண்ணாமலை இல்லாமல் எந்த முடிவும் இல்லை? எடப்பாடிக்கு உணர்த்தினாரா அமித் ஷா? பாஜகவினர் ரியாக்சன்
டெல்லி: அண்ணாமலை இல்லாமல் எந்த முடிவும் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உணர்த்தி இருக்கிறார் என்று பாஜகவினர் நேற்று நடந்த சந்திப்பை சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
அதிமுக குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய சில கருத்துக்கள் அதிமுகவினரை கோபத்தில் ஆழ்த்தியது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக பதிலடி கொடுத்தார். அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.

இதனால் ஒரு கட்டத்தில் அதிமுக பாஜக இடையே சிறுவிரிசலே ஏற்பட்டது வெளியே தெரிந்தது. அதிமுக உடன் பாஜக கூட்டணி வைக்குமா என்பது கேள்விக்குறியா என்கிற அளவிற்கு விமர்சனங்கள் இரு தரப்பிலும் மாறி மாறி எழுந்தன. அப்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக தங்கள் கூட்டணியில் தான் இருக்கிறது என்று உறுதி செய்தார். இதனை எடப்பாடி பழனிசாமியும் அப்போது ஆமோதித்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்து களம் இறங்கியது. புலிகேசி தொகுதியில் அதிமுக போட்டியிட்டது. ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவின் வேண்டுகோளை ஏற்று தனது வேட்பாளரை அதிமுக வாபஸ் பெற்றது. இது ஒரு புறம் எனில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அதிமுக குறித்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் அளித்தது. அவரது தலைமையிலான அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்பதும் உறுதியானது. இதனால் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். கர்நாடகா தேர்தலை வைத்து தனது தலைமையிலான அணி தான் அதிமுக என்று அங்கீகாரம் பெற்ற மகிழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடீவு செய்தார். அதன்படி அவருக்கு புதன்கிழமை இரவு நேரமும் ஒதுக்கப்பட்டது.
இதையொட்டி எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சென்றனர். சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் டெல்லி சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஆனபிறகு முதல் முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சோகா ஓட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது ஓய்வு எடுத்த எடப்பாடி பழனிசாமி, இரவு 8.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கிருஷ்ணமேனன் ரோடு இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார். இரவு 9 மணிக்கு பிறகு அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு 10 மணி வரை நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிலையில் பாஜகவினர் அண்ணாமலை இல்லாமல் பாஜக மேலிடம் எந்த முடிவும் எடுக்காது என்று கூறினோம் அல்லவா அதுதான் இன்று நடந்திருக்கிறது என்று கூறியுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீராம் ஷேசாத்திரி கூறும் போது, நாங்கதான் சொன்னோம் இல்லை அமித் ஷா அவர்கள் அண்ணாமலை இல்லாமல் எடப்பாடி அவர்களை சந்திக்க மாட்டார்கள் என்று. இப்போது புரிந்திருக்கும் அண்ணாமலை வெறும் மேனஜர் அல்ல என்றும் அவரை மீறி தமிழ்நாட்டில் கூட்டணி இருக்காது. அண்ணாமலையின் ஒவ்வொரு நடவடிக்கையின் பின்னும் மத்திய பாஜக தலைவர்களின் ஆதரவு இருக்கிறது. பாஜகவை / அண்ணாமலையை எதிர்க்க திமுகவின் துருப்பு சீட்டு எடாபாடிதான் என்று விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தொழிற்பிரிவு தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள பதிவில்,. தமிழக பாஜக தலைவர் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் சம்பந்தமான எந்த முடிவையும் தேசிய தலைமை எடுக்காது என்பதை உறுதி செய்யும் படம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகா மாநிலத்தில் பிரச்சாரத்தில் இருந்த அண்ணாமலையை நேரில் அழைத்ததாகவும், அவரை வைத்துக்கொண்டு தான் எடப்பாடி பழனிசாமியுடன் பேசியதாகவும் பாஜகவினர் கூறுகிறார்கள். இதன் மூலம் தமிழக விவகாரத்தில் அண்ணாமலை இல்லாமல் எந்த முடிவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் உணர்த்தியதாகவும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications