"அப்படியே கொரோனா மாதிரியே.." சீனாவை வைத்து செய்யும் நிமோனியா.. உச்சக்கட்ட அலர்ட் மோடில் இந்தியா
டெல்லி: சீனாவில் திடீரென நிமோனியா பாதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இப்போது வடக்கு சீனாவில் நிமோனியா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்குள்ள குழந்தைகளிடையே சுவாச நோய் படுவேகமாக அதிகரித்துள்ளது.

இதைச் சுட்டிக் காட்டி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பொதுச் சுகாதார கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சீனாவில் உள்ள சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பரபர கடிதம்: கொரோனா காலகட்டத்தில் தான் மத்திய அரசு, இதுபோல எச்சரிக்கையாக இருக்கும்படி மாநில அரசுகளுக்குக் கடிதங்களை எழுதி வந்தது. இப்போது, மீண்டும் இந்த நிமோனியா பாதிப்பு காரணமாக மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன், பிசிஆர் கருவிகள், வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளுடன் இருக்கும் நோயாளிகள் குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மூக்கு மற்றும் தொண்டைகளில் இருக்கும் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நிலைமை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனா சொல்வது என்ன: அதேநேரம் சீனாவில் இப்போது நிமோனியா பாதிப்பு படுவேகமாக அதிகரித்துள்ளது. இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் கூட இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இருப்பினும், இவை ஏற்கனவே நமக்குத் தெரிந்த நோய்க் கிருமிகளால் தான் ஏற்படுவதாகச் சீனா விளக்கமளித்துள்ளது. புதிதாகச் சீனாவில் எந்தவொரு வைரஸும் பரவவில்லை என்றும் அசாதாரணமாக எதையும் கண்டறியவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இருப்பினும், இது சர்வதேச அளவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இருக்கும் வைரஸாக இருந்தாலும் கூட அது புதிதாக உருமாற்றம் அடைந்து புதிய பண்புகளைப் பெற்றும் வாய்ப்புகள் உள்ளது. அதுபோன்ற சமயங்களில் அவை படுவேகமாக பரவி அடுத்த பெருந்தொற்றை கூட உருவாக்கலாம்.
கொரோனா போலவே: எல்லாவற்றையும் தாண்டி உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு மற்றும் சார்ஸ் பாதிப்பு ஏற்பட்ட போது இரண்டுமே முதலில் அசாதாரண நிமோனியா என்றே அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே அது ஒட்டுமொத்த உலகையும் புரட்டிப் போடும் பெருந்தொற்றாக மாறியது. இதன் காரணமாகவே சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தைக் கவனமாகக் கையாள விரும்புகிறார்கள்.
மேலும், கொரோனா பரவ ஆரம்பிக்கும் முன்பே அது குறித்துச் சரியாக எச்சரித்த அமைப்பு என்றால் அது ப்ரோமெட் (ProMED), அதே அமைப்பு இப்போது சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரிப்பது குறித்து அலர்ட் செய்துள்ளது.
சீனாவில் நிமோனியா பாதிப்பு மோசமாக இருப்பதாகவும் அங்கே மருத்துவமனைகள் அனைத்திலும் குழந்தைகள் நிரம்பி வருவதாகவும் எச்சரித்திருந்தனர். இந்த நிமோனியா பாதிப்பு ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இல்லை. அது பல இடங்களில் பதிவாகியுள்ளது. இருப்பினும், தற்போது வரை இருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது புதிய வைரஸ்கள் இருக்க வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications