ஏமாற்றும் வானிலை! வதைக்கும் வெயில்! கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம்! காரணம் இதுதான்
டெல்லி: இந்தியாவில் முதல் முதலாக தென்மேற்கு பருவழை கேரளாவில் தான் துவங்கும். அதன்பிறகு தான் பிற தென்இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவழை படிப்படியாக பொழியும். இந்நிலையில் தான் கேரளாவில் தென்மேற்கு பருவழை தொடங்குவதில் இன்னும் தாமதம் ஏற்படும் எனவும், அதற்கான காரணத்தையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவழை ஆண்டுதோறும் பரவலாக பெய்யும். குறிப்பாக கேரளாவில் தான் தென்மேற்கு பருவழை முதல் முதலாக தொடங்கும். அதன்பிறகு கர்நாடகா, தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கும்.

வழக்கமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை என்பது மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் முதல்வாரத்தில் தொடங்கிவிடும். இந்த முறையும் ஜூன் 4ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் தொடங்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் இன்று தேதி ஜூன் 5 ஆகும் நிலையில் தான் கேரளாவில் இன்னும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை.
இதனால் தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்காமல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே தான் இன்னொரு அதிர்ச்சி தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலம் இன்னும் தள்ளிபோகலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தெற்கு அரபிக்கடலில் மேற்கு திசையில் இருந்து காற்று சராசரியா கடல் மட்டத்திலிருந்து 2.1 கிமீ உயரத்தில் நிலவும் சூழலில் தென்கிழக்கு அரபிக்கடலில் வீசும் காற்று சுழற்சியால் மேகக்கூட்டம் ஒன்றாக குவியும். அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் பட்சத்தில் கேரள கடற்கரையை நோக்கி நகர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை தடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் மே மாதம் இறுதி அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே துவங்கியது. அதாவது கடந்த 2021ல் மே 29ம் தேதியிலும், 2020ல் ஜூன் 3ம் தேதியும், 2019 ல் ஜூன் 8 ம் தேதியும், 2018 ல் மே 29ம் தேதியிலும் தென்மேற்கு பருவமழை துவங்கியது.












Click it and Unblock the Notifications