வேக்சின் போட்டவர்களையும் தாக்கும் புது ஜேஎன் 1 கொரோனா.. WHO அடித்த எச்சரிக்கை மணி! ஏன் ஆபத்தானது
டெல்லி: புது வகை கொரோனாவால் கேரளாவில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த புது வகை வைரஸ் குறித்து நாம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஜேஎன் 1 கொரோனா இப்போது கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் பெண் ஒருவருக்கு இந்த ஜேஎன் 1 வகை கொரோனா கண்டறியப்பட்டது.

இந்த ஜேஎன் 1 வேரியண்ட் காரணமாக உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கும் நிலையில், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது,
புது வேரியண்ட்: இந்த ஜேஎன் 1 வேரியண்ட் என்பது கொரோனா ஒமிக்ரானின் துணை பிரிவான BA.2.86இன் புதிய மாறுபாடு ஆகும். இந்த வகை கொரோனாவின் ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வேரியண்ட் வேகமாகப் பரவும் திறன் கொண்டது. மேலும், நோய் எதிர்ப்புச் சக்தியைத் தவிர்க்கும் திறனும் இதற்கு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதுவே இந்த கொரோனா வேரியண்ட்டை ஆபத்தானதாக மாற்றுகிறது.
இதன் காரணமாகவே இந்த வகை கொரோனாவை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அறிகுறிகள்: இதன் அறிகுறிகள் மற்ற வேரியண்ட்களில் இருந்து வேறுபட்டது இல்லை. பொதுவாக அனைத்து கொரோனா வகைகளின் அறிகுறிகளும் ஒரே போலத் தான் இருக்கும். இந்த குறிப்பிட்ட வகை கொரோனாவுக்கு எனத் தனியாக எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
அதேநேரம் இந்த திரிவு குறித்து நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை என்றும் இதன் காரணமாகவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், இந்த வேரியண்ட் நமது வேக்சின்களில் இருந்து தப்பிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதும் இதைப் பிரச்சினைக்குரிய ஒன்றாக மாற்றுவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
உலக நாடுகள்: கூடுதல் ஸ்பைக் புரோட்டீன் பிறழ்வைக் கொண்ட இந்த ஜேஎன் 1 வகை கொரோனா பாதிப்பு சீனாவிலும் பரவியுள்ளது. இதுவரை 7 பேருக்கு இந்த பாதிப்பு அங்கே கண்டறியப்பட்டுள்ளது. துணை வேறுபாடு JN.1 மூலம் ஏற்படும் COVID இன் ஏழு நிகழ்வுகளைச் சீனா கண்டறிந்துள்ளது.
அந்த வகை கொரோனா கடந்த செப். மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், அதன் பிறகு இப்போது வரை அது 11 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வகை கொரோனாவால் ஆபத்து இல்லை என்றாலும் இதை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் ஒரே கருத்தாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 335 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா அதிகரிக்கும் நிலையில், இது நமக்குக் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்திய ஆய்வாளர்களும் கூட தீவிர கண்காணிப்பு அவசியம் தான் என்றாலும் கூட இப்போது கட்டுப்பாடுகள் எதுவும் அவசியமில்லை என்றே கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு: கொரோனா அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டாக்டர் மரியா வான் கெர்கோவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா அதிகரிக்கக் காரணத்தை விளக்கிய அவர், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்கினார். கொரோனா மட்டுமின்றி இன்புளுயன்சா, பாக்டீரியா பாதிப்பும் இந்த சீசனில் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பின் டாக்டர் மரியா வான் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications