"வேண்டாம்.." இதுவரை ஒரே ஒரு அமெரிக்க போர் விமானத்தை கூட வாங்காத இந்தியா.. என்ன காரணம் தெரியுமா?
டெல்லி: மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் விமானங்களை அதிகளவில் குவித்து வருகிறது. அதேநேரம் அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை இந்தியா வலுப்படுத்தி வரும் போதிலும், இதுவரை ஒரு அமெரிக்கப் போர் விமானத்தைக் கூட இந்தியா வாங்கியதே இல்லை. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியா அமெரிக்கா உறவு கடந்த சில ஆண்டுகளாகவே சீராக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் இந்தியா அமெரிக்கா இணைந்து செயலாற்றி வருகிறது. இரு நாட்டுத் தலைவர்களும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இருந்தும் கூட அமெரிக்காவிடம் இருந்து இதுவரை இந்தியா ஒரு போர் விமானத்தைக் கூட வாங்கியதே இல்லை.

அமெரிக்கா
அதற்காக அமெரிக்காவிடம் அதிநவீன போர் விமானங்கள் எதுவும் இல்லை எனச் சொல்லிவிட முடியாது. விமானப்படையில் உலகிலேயே அதிசக்தி வாய்ந்த விமானங்கள் அமெரிக்கா வசமே இருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஒரு போர் விமானத்தைக் கூட வாங்கியதே இல்லை. இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனமான என்டிடிவி சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஈரான் தாக்குதலில் இப்போது பயன்படுத்தப்படும் எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட், எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள், எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன், எஃப்-22 ராப்டர், எஃப்-35 லய்ட்னிங் II மற்றும் பி-2 ஸ்டீல்த் குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்ட பல அமெரிக்கப் போர் விமானங்கள் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு முன்மொழியப்பட்டன. பிற அமெரிக்க ராணுவத் தளவாடங்களை இந்தியா வாங்கிய போதிலும், இந்தப் போர் விமான ஒப்பந்தங்களை இந்தியா நிராகரித்தே வந்துள்ளது..
ராணுவ கொள்முதல்
கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. சி-17 குளோப்மாஸ்டர், சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானங்கள், பி-8ஐ போஸிடான் கடல் கண்காணிப்பு விமானங்கள், ஏஎச்-64 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள், சிஎச்-47 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்கள் போன்ற பல முக்கிய அமெரிக்கத் தளவாடங்களை இந்தியா வாங்கியுள்ளது. கண்காணிப்பு, தாக்குதல் பணிகளுக்காக MQ-9B பிரிடேட்டர் ட்ரோன்களையும் இந்தியா பெறவிருக்கிறது.
பாகிஸ்தான்
பல ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த கொள்முதல் சர்வதேச அளவில் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவை இந்தியாவின் மிகப் பெரிய ஆயுத சப்ளையர்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இப்படி இதர தளவாடங்களை வாங்கினாலும் கூட போர் விமானங்கள் மட்டுமே இந்தியா தொடர்ந்து தவிர்த்தே வருகிறது. போர் விமானங்களில் மட்டும் அமெரிக்காவை இந்தியா தவிர்க்கப் பனிப்போர் கால வரலாறுதான் காரணம் என என்டிடிவி குறிப்பிடுகிறது. அந்த காலகட்டத்தில் அமெரிக்கா எஃப்-86 சேபர், எஃப்-104 ஸ்டார்ஃபைட்டர், எஃப்-86டி, ஏ-37, எஃப்-16 ஃபைட்டிங் ஃபால்கன் போன்ற பல முன்னணி விமானங்களைப் பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது.
பாகிஸ்தான் அந்த விமானங்களைத் தான் இந்தியாவுடனான மோதல்களில் பயன்படுத்தியது. இந்தியா இதன் காரணமாகவே அமெரிக்க சிஸ்டத்தில் இருந்து மாறுபட்டு, மற்ற நாடுகளில் இருந்து போர் விமானங்களைப் பெறத் தொடங்கியது. இந்திய விமானப்படை MiG-21, MiG-23, MiG-29, Su-30MKI போன்ற சோவியத்/ ரஷ்ய விமானங்கள் மற்றும் ஜாகுவார் (பிரிட்டன்- பிரான்ஸ்), மிராஜ் 2000 (பிரான்ஸ்), ஹாக்கர் ஹண்டர் (பிரிட்டன்) போன்ற பிற நாடுகளின் போர் விமானங்களைப் பயன்படுத்துகிறது.. இதில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய Su-30MKI இந்தியப் போர் விமானப் படையின் முதுகெலும்பாக உள்ளது.
அணு ஆயுத சோதனை
அதேபோல 1998 மே மாத மாதம் நாம் அணுகுண்டு சோதனை நடத்தியபோது அமெரிக்கா அதை எப்படிக் கையாண்டது என்பதும் இதற்கு மற்றொரு முக்கிய காரணம். அப்போது அணு ஆயுத சோதனையை மேற்கொண்டதற்காக, பில் கிளின்டன் நிர்வாகம் இந்தியா மீது தடைகளை விதித்து, தொழில்நுட்பப் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தியது. முக்கியமான பாதுகாப்புத் திறன்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை இந்தியாவுக்கு இந்தச் சம்பவம் உணர்த்தியது.
அதன் பிறகு இந்தியா அமெரிக்கா இடையிலான உறவுகள் மேம்பட்டாலும், இந்தியா சற்று கவனமாகவே இருந்தது. ஆயுதக் கொள்முதலில் வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது ஒரு நீண்டகாலப் பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது.
என்ன காரணம்
மற்ற ராணுவத் தளவாடங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கும்போது போர் விமானங்களை வாங்குவதில் மட்டும் என்ன தயக்கம் என்ற சந்தேகம் பலருக்கும் வரும். போக்குவரத்து விமானங்கள்/ ஹெலிகாப்டர்களைப் போலல்லாமல், போர் ஜெட்கள் ஒரு நாட்டின் வான்வழிப் போர் திறனின் மையமாக உள்ளன.. ஒரு முறை வாங்கிவிட்டால் எல்லாம் ஓவர் என இருந்துவிட முடியாது.. உதிரிப் பாகங்கள், சாப்ட்வேர் அப்டேட், ஏற்றுமதி ஒப்புதல்கள் எனத் தொடர்ந்து வெளிநாட்டைச் சார்ந்தே நாம் இருக்க வேண்டும்.
அரசியல் பதற்றங்கள் காரணமாக அமெரிக்கா இதுபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியா மீது விதித்தால் அது பெரும் சிக்கலை உருவாக்கும். பாகிஸ்தானின் எஃப்-16 விமானப்படைக்கு உதிரிப் பாகங்கள் வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு விதித்தது. அதேபோல அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகத் துருக்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதும் ஒரு உதாரணம். இதுவே இந்தியா யோசிக்கக் காரணமாக இருக்கிறது.
அமெரிக்கப் போர் விமானம்
கடந்த 2000 முதலே அமெரிக்கா பல ஜெட் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க முன்மொழிந்துள்ளது. 2000களில் இந்தியாவின் பல்திறன் எஃப்-16, எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் வழங்க முன்வந்தது. பிற்காலத்தில், இந்தியாவுக்காகவே எஃப்-21 என்ற மேம்படுத்தப்பட்ட எஃப்-16 வகை வழங்க ரெடியாக இருந்தது.. சமீபத்தில் கூட அமெரிக்கா எஃப்-15இஎக்ஸ் ஈகிள் II-யையும் வழங்கத் தாயாராக இருந்தது. ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தங்கள் எதையும் தொடரவில்லை. மாறாக பிரான்ஸின் ரபேல் விமானத்தைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இதுவரை அமெரிக்கப் போர் விமானம் ஒன்றைக் கூட இந்தியா வாங்கியதே இல்லை.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
இந்தா வாங்கிக்கோ.. என்ன பெரிய எஃப்பிஐ? அமெரிக்காவை அலற விட்ட ஈரான் ஹேக்கர்கள்! ஷாக்குக்கு மேல் ஷாக்! -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications