ஈரானில் பாகிஸ்தான் குறி வைத்து தாக்குதல் நடத்திய பலுசிஸ்தான் விடுதலை முன்னணி.. சீனாவை கதறவிட்ட கதை!
டெல்லி: ஈரானில் இருந்து செயல்படுவதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் இன்று தாக்குதல் நடத்திய பலுசிஸ்தான் விடுதலை முன்னணி Baloch Liberation Front, சீனாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்திய இயக்கம் என்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பல்வேறு இயக்கங்கள் செயல்படுகின்றன. இதில் ஒன்றுதான் ஜெய்ஷ் அல்-அட்ல் பயங்கரவாத இயக்கம்.

ஈரான் தாக்குதல் ஏன்?: பாகிஸ்தானின் பலுசிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிற ஜெய்ஷ் அல்-அட்ல் பயங்கரவாத இயக்கம் ஈரானில் பல தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. ஈரானில் கடந்த பல ஆண்டுகளாக பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம் தாக்குதல்கள் நடத்தியது. இதனால் ஈரான், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்க முகாம்களை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
பாகிஸ்தான் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானும் இன்று சரமாரி தாக்குதல்கள் நடத்தியது. இத்தாக்குதல்களில் ஈரானில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஈரானில் இருந்து செயல்படுகிற பலுசிஸ்தான் விடுதலை முன்னணியின் முகாம்களையே பாகிஸ்தான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது.
பலுசிஸ்தான் விடுதலை போராட்டம்: பலுசிஸ்தான் விடுதலை முன்னணியானது, பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தை சுய நிர்ணய அடிப்படையில் தனி நாடாக்க வேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது. பலுச் இன மக்கள் தனி தேசிய இனம்; அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதற்காக நீண்டகாலமாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஈழத்தில் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தைப் போன்றது பலுச் விடுதலை போராட்டம். இதற்கு ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் வெளிப்படையாகவும் சில நாடுகள் மறைமுகமாகவும் ஆதரவு தருகின்றன.
சீனா திட்டங்கள் மீது தாக்குதல்: பலுசிஸ்தான் மாகாணமானது ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்டது. பாகிஸ்தானுடனான நல்லுறவை பயன்படுத்தி தங்களது தாயக நிலத்தின் வளங்களை சீனா அபகரிப்பதற்கு பலுசிஸ்தான் விடுதலை முன்னணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தின் வழியாக சீனா செயல்படுத்தி வரும் எரிவாயு திட்டம் உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இத்திட்டங்கள் மீதும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணியினர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதனால் சீனாவும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணிக்கு எதிராக இருந்து வருகிறது. பலுசிஸ்தானை பிரித்து ஈரான் உள்ளிட்டவை தனிநாடாக்கி விடக் கூடாது என்பதற்காக பயங்கரவாத இயக்கங்களையும் பலுசிஸ்தானில் வளர்த்துக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications