புது சட்டத்தால் லாரி டிரைவர்கள் ஸ்ட்ரைக்.. வடமாநிலங்கள், ஹைதராபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
டெல்லி: வடமாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய சட்டத்தால் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதே பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் எனும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தான் தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இது ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சியை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என மத்திய அரசு கூறியது.

இதையடுத்து இந்த 3 சட்டங்களை மாற்ற மத்திய அரசு புதிய மசோதாக்களை கொண்டு வந்தது. இந்த மசோதாக்களின்படி இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா என பெயர் மாற்ற பரிந்துரைத்தது.
இதுதவிர பல சட்டப்பிரிவுகளிலும், தண்டனைகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவும் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் இந்த புதிய பெயர் மாற்றம், சட்டங்கள் நடைமுறைக்கு வர உள்ளது.
#TruckDriver#HitandRunLaw#HitANDRun#TruckDriversProtest pic.twitter.com/ivK0jM6x0X
— Mohd Alishan (@alvialishan84) January 2, 2024
இந்த புதிய சட்டம் என்பது ‛ஹிட் அன்ட் ரன்' அதாவது விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றால் அந்த வாகனத்தின் டிரைவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகுக்கிறது. ஐபிசி சட்டத்தின் ‛ஹிட் அன்ட் ரன்' வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு வரை மட்டுமே சிறை தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில் புதிய சட்டத்தில் டிரைவர்களுக்கான தண்டனை என்பது கூடுதலாக 8 ஆண்டுகள் வரை கிடைக்கும்.
இந்நிலையில் தான் இந்த புதிய சட்டத்துக்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனக்கூறி இன்று லாரி டிரைவர்கள் நாடு முழுவதும் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். அதன்படி வடமாநிலங்களில் டிரைவர்களின் வேலை நிறுத்தம் தீவிரமாகி உள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக வடமாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லாரிகள் தான் பெட்ரோல், டீசல் தினமும் ஏற்றி செல்லப்படுகின்றன. தற்போது லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் பெட்ரோல், டீசல் சப்ளை என்பது பல்க்குகளுக்கு இல்லாத நிலை உள்ளது. இதனால் பல வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் மக்கள் கேன்களை எடுத்து சென்று பெட்ரோல், டீசல் வாங்கி செல்கின்றனர்.
இந்த அச்சம் தற்போது தென்மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏராளமான பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் வாங்கி செல்கின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தெலுங்கானா மாநில பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் ஜி வினய் குமார் கூறுகையில், ‛‛லாரி டிரைவர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பெட்ரோல், டீசல் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய இநு் வேலை நிறுத்த போராட்டம் இன்று நிலைமையை மோசமாக்கி உள்ளது. இதனால் ஹைதராபாத்தில் ஏராளமான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது " என்றார்.












Click it and Unblock the Notifications