வந்தே பாரத் ரயில்களுக்கு பிரதமர் மோடியே நேரடியாக பச்சைக்கொடி காட்டுவது ஏன்? இவ்வளவு விஷயம் இருக்கா
டெல்லி: அனைத்து வந்தே பாரத் ரயில்களுக்கும் பிரதமர் மோடியே கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார். ரயில்வே அமைச்சருக்குப் பதிலாகப் பிரதமர் மோடி நேரடியாக ஏன் வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கி வைக்கிறார் என தெரியுமா.. இதற்கான பதிலைப் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து 5 வந்தே பாரத் ரயில்களைத் தொடங்கி வைத்தார். இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் நாடு முழுக்க இப்போது இயங்கும் வந்தே ரயில்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில்கள் பல ரூட்களில் கொண்டு வரப்பட்டது.

வந்தே பாரத்: இவை அனைத்தையும் பிரதமர் மோடியே கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார். வழக்கமாக ரயில்வே அமைச்சரே இதுபோன்ற புதிய ரயில்களைத் தொடங்கி வைப்பார். ஆனால், வந்தே பாரத் ரயில்களில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதற்கு என்ன காரணம்.. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பதிலாக ஏன் பிரதமர் மோடியே அனைத்து வந்தே பாரத் ரயில்களையும் தொடங்கி வைத்து வருகிறார் என்பதே இப்போது அனைவருக்கும் எழும் கேள்வி?
இந்த ரயிலுக்கான முழுக் கிரெடிட்டையும் பிரதமர் மோடி தனதாக்கிக் கொள்ள முயல்வதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றனர். உண்மையில் என்ன காரணம் வாங்க பார்க்கலாம். மத்திய அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்று வந்தே பாரத் என்பதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இது மட்டும் காரணமா என்றால் இல்லை. இந்தக் கேள்விக்கு எளிமையான பதில், பிரதமராக இருக்கும் மோடி தான் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கிறார்.. அந்த வகையில் பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
முக்கியத்துவம்: இதன் காரணமாகவே எல்லா ரயில்களையும் அவரே தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு டிசம்பரில் அவரது தாயார் ஹீராபாய் காலமான சமயத்திலும், மேற்கு வங்கத்தில் ஹவுரா மற்றும் ஜல்பைகுரி இடையேயான வந்தே பாரத் ரயிலைச் சொன்ன தேதியில் தொடங்கி வைத்தார். தாய் இறந்த துக்கத்திற்கு நடுவிலும் காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது அவர் வந்தே பாரத் ரயில்களுக்கு எந்தளவுக்கு முன்னுரிமை மற்றும் முக்கியத்துவத்தை அளிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

இந்திய ரயில்வே இப்போது நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது, வருவாய் இழப்பு, விபத்துக்களால் ரயில்வே துறையின் பெயர் வெளியே டேமேஜ் ஆகியுள்ளது. ரயில்வே துறை நவீனமயமாக்கப்படாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதற்குப் பதிலாகவே வந்தே பாரத் ரயில்களை முன்வைக்கிறார்கள். இதுவும் பிரதமர் மோடி இதில் தவறாமல் கலந்து கொள்ள ஒரு காரணம்.
மேலும், 2013 முதல் நரேந்திர மோடியின் எழுச்சிக்குப் பின்னால் உள்ள காரணிகளில் ஒன்று, பிரமிக்க வைக்கும் சாதனைகளை முன்வைக்கும் அவரது பேச்சு. அந்த வகையில் அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பிரமிக்க வைக்கும் சாதனையாக உருவகப்படுத்த பாஜக முயல்கிறது. வந்தே பாரத் இந்திய ரயில்வே-இன் முக்கிய சாதனைகளில் ஒன்று என்பதை நம்மால் மறுக்க முடியாது.
மிக வேகம்: ஏனென்றால் இந்தியாவில் இருக்கும் மற்ற ரயில்களின் சராசரி வேகம் 50கிமீ என்று இருக்கும் நிலையில், வந்தே பாரத் அதைவிட மூன்று மடங்கு வேகமாக 160கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. மிகவும் சவுகரியமாக ஏசி வசதி, சுழலும் நாற்காலி எனப் பல வசதிகளுடன் மிக வேகமாக செல்ல முடிவதால் நடுத்தர மக்களுக்கு மிக மிகச் சிறந்த சாய்ஸாக அமைகிறது. இது மட்டும் தான் காரணமா.. அரசியல் ரீதியாகக் காரணம் இல்லையா எனக் கேட்கலாம். நிச்சயம் அரசியல் ரீதியான காரணமும் இருக்கவே செய்கிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. மேலும், வந்தே பாரத் என்ற பெயரிலும் ஒரு வித வசீகரம் இருக்கிறது. இந்த ரயிலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மட்டும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தால், அதற்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைக்காது. பிரதமர் மோடி நேரடியாக இதில் கலந்து கொள்ளும் போது, அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. இது பாஜகவுக்கு மிகப் பெரிய பூஸ்ட்டாகவே அமையும் என்பது அவர்களின் கருத்து.
என்ன திட்டம்: நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 2024-க்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், மக்களவை தேர்தலுக்கு முன் வந்தே பாரதத்தின் ஸ்லீப்பர் கிளாஸ் மாடலைக் கொண்டுவரும் திட்டமும் உள்ளது. இது மட்டுமின்றி பிரபல யாத்திரைத் தலங்களுக்கு இடையூறு இல்லாத பயணத்தை வழங்க விரும்புவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இவை எல்லாம் சேர்ந்து தான் வந்தே பாரத் ரயில்களுக்கு இத்தனை முக்கியத்துவத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
ரயில்கள் தனியாக பிராண்ட் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதில் இருந்தே இப்படிப் பல ரயில்கள் பிராண்ட் செய்யப்பட்டுள்ளன.2006 ஆம் ஆண்டில், அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு யாதவ், ஏழைகளை ஈர்க்கும் முயற்சியில் கரிப் ரத் ரயில்களைத் தொடங்கினார். மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராகப் பதவியேற்றதும், துரந்தோ ரயில்களை ஆரம்பித்தார்.
ஆனால், இப்போது அந்த ரயில்கள் பெரியளவில் பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், வந்தே பாரத் ரயிலுக்கும் அதே நிலை ஏற்படும் என நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் பிரதமர் மோடி இதில் சிறப்புக் கவனம் செலுத்துகிறார். ரயில்வே துறையில் தாங்கள் செய்து வரும் மாற்றத்திற்கான சான்றாக பாஜகவும் இதை முன்னிறுத்த விரும்புகிறது. இவை எல்லாம் சேர்த்தே பிரதமர் மோடியை அனைத்து வந்தே பாரத் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வைக்கிறது.












Click it and Unblock the Notifications