"வெயிட் அண்ட் சி.." ராஜஸ்தானில் பாஜகவுக்கு வாய்ப்பே இல்லை! ஏன் தெரியுமா? காரணங்களை பட்டியலிட்ட கெலாட்
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்தத் தேர்தலில் பாஜக வெல்ல முடியாது எனக் குறிப்பிட்ட அசோக் கெலாட், இதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் அங்கே தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியை அமைத்தது.

இந்த வெற்றி கொடுத்த தெம்புடன் காங்கிரஸ் கட்சி இந்தாண்டு இறுதியில் நடைபெறும் 5 மாநில தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது. இதற்கான நடவடிக்கையைக் காங்கிரஸ் தொடங்கிவிட்டது.
ராஜஸ்தான்: இதில் காங்கிரஸ் கட்சிக்கு ராஜஸ்தான் மிகவும் முக்கியமான ஒரு மாநிலம் ஆகும். அங்கே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் கூட அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. டெல்லி தலைமை இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாலும் அது பெரியளவில் பலன் தருவதாகத் தெரியவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி பாஜக அங்கே ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறது.
இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மக்களிடையே வாக்குவாதத்தைப் பரப்பி அவர்களைப் பிரிக்க முயலும் பாஜகவின் திட்டம் கர்நாடகாவில் வேலை செய்யவில்லை. இது ராஜஸ்தானிலும் வேலை செய்யாது என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவால் ராஜஸ்தான் மாநிலத்தில் நிச்சயம் வெல்லவே முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அசோக் கெலாட்: ராஜஸ்தானில் தனது ஆட்சியால் மக்கள் பெரியளவில் பலனடைந்துள்ளனர் என்றும் இதனால் மீண்டும் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பாஜக வகுப்புவாத கருத்துகளைப் பரப்பி மக்களைப் பிரித்து அதன் மூலம் வெல்ல முயல்வார்கள். தொடர்ந்து மதத்தைப் பற்றிப் பேசினால், மக்கள் ஈர்க்கப்படுவார்கள் தான். ஆனால் அது சரியான செயல் இல்லை.
பிரதமர் மோடியாக இருந்தாலும் சரி, அமித் ஷாவாக இருந்தாலும் சரி... மத ரீதியான கோஷங்களை எழுப்புகிறார்கள்... ஆனால், இந்த முறை அவர்களுக்கு இது எதுவும் பலிக்காது. கர்நாடகாவில் பஜ்ரங் பாலி என்று கூறிய போதிலும் அவர்களுக்கு அது கை கொடுக்கவில்லை. பஜ்ரங் பாலி எனச் சொல்வதெல்லாம் ஒரு வகையான குற்றம் தான். எனவே பிரதமர் மோடி பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று கூட நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.
இது தான் அவர்களின் திட்டம். ராஜஸ்தானிலும் நிச்சயம் அவர்கள் இதை முயல்வார்கள். ஆனால், பாஜக என்ன தான் தீவிரமாகப் பிரசாரம் செய்தாலும் அதைச் சமாளிக்க வலுவான பிரசார திட்டத்தைக் காங்கிரஸ் வகுத்துள்ளது. இந்த முறை நிச்சயம் நாங்கள் ஆட்சியைத் தக்க வைப்போம்.

காங்கிரஸ் வெல்லும்: மக்களை மனதில் வைத்துப் பல திட்டங்களை ஏற்கனவே கொண்டு வந்துள்ளோம். இவை தேர்தலைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டது இல்லை. நீண்ட கால நோக்கில் இவை மக்களுக்கு நல்ல பயன் அளிக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் சிறப்பான ஒரு ஆட்சியைக் கொடுத்துள்ளோம். இதனால் நிச்சயம் நாங்கள் வெல்வோம் என நம்புகிறேன். உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், தண்ணீர், மகள்கள் நலன் அல்லது சாலைகள் போன்ற அடிப்படை பிரச்சினைகளைச் சரி செய்துள்ளோம்.
ராஜஸ்தானில் 1 லட்சம் கிமீ சாலைகள் அமைக்க உள்ளோம். அதில் ஏற்கனவே 56,000 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கி வருகிறோம். இந்தத் திட்டங்களால் மாநிலத்தில் உள்ள பெரும்பகுதி மக்கள் பயன் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
உட்கட்சி மோதல்: தொடர்ந்து சச்சின் பைலட் உடன் இருக்கும் மோதல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "சமீபத்தில், டெல்லியில், ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி. வேணுகோபால், சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா இருக்க நாங்கள் இருவரும் பேசினோம்.. ஆனால், அது குறித்து இப்போது பேச விரும்பவில்லை. நான் இப்போது ஏதாவது சொன்னால் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். எனவே, இது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. இது உட்கட்சி பிரச்சினை.
முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பைலட் கூறுகிறார். இப்போதும் வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளேன். வசுந்தரா ராஜே மீதான குற்றச்சாட்டுகள் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. யாராவது உரிய ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நடவடிக்கை எடுக்கத் தயாராகவே இருக்கிறேன்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் மட்டுமே இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்று கூறிய கெலாட், ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத இந்த பாசிச சக்திகளை எப்படித் தோற்கடிப்பது என்பதில் காங்கிரஸ் இப்போது கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications