விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெர்மனி, அமெரிக்கா என உலக நாடுகள் இந்த விவகாரத்தில் கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்துள்ளன.
டெல்லியில் கடந்த 2021-22 காலகட்டத்தில் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. அதுநாள் வரை அரசு மட்டுமே மது விற்பனை செய்து வந்த நிலையில், தனியாருக்கும் அனுமதி தரப்பட்டது.

இருப்பினும், அந்த மதுபான கொள்கை தனியாருக்கு ஆதரவளிக்கும் வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
கெஜ்ரிவால் கைது: அதன்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்திய நிலையில், பலர் கைது செய்யப்பட்டனர். முதலில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவர் சுமார் ஓராண்டிற்கு மேலாகச் சிறையில் தான் இருக்கிறார். இதற்கிடையே சமீப காலங்களில் இந்த விவகாரத்தில் இரண்டு முக்கிய கைதுகள் நடந்தன. முதலில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கவிதா கைது செய்யப்பட்டார். அடுத்து சில நாட்களிலேயே டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்,
கெஜ்ரிவால் கைது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகள் பலரும் கெஜ்ரிவால் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கிடையே இந்த விவகாரம் உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. முதல் நாடாக ஜெர்மனி இந்த விவகாரத்தில் கருத்து கூறியது. ஜெக்ரிவால் விவகாரத்தில் உரிய விசாரணை தேவை என்று ஜெர்மனி வலியுறுத்தியது.
ஜெர்மனி: குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அனைவரையும் போலவே கெஜ்ரிவால் மீது நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த ஜெர்மனி, கெஜ்ரிவால் தடையின்றி அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குற்றமற்றவர் என்ற கோணத்தில் இருந்து விசாரணை நடத்துவதே சட்டத்தின் படியான விசாரணையின் அடிப்படை என்று கூறியிருந்தது.
அமெரிக்கா: இதற்கிடையே இப்போது இரண்டாவது நாடாக அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் கருத்து கூறி இருக்கிறது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்த செய்திகளைக் கண்காணித்து வருவதாகவும், சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சருக்கு நியாயமான மற்றும் சரியான நேரத்தில் சட்ட நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்து இருந்தது.
அமெரிக்கா இது மட்டுமின்றி காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடங்கப்பட்டது குறித்தும் கருத்து கூறியிருக்கிறது. அதாவது தேர்தல் காலங்களில் திறம்படப் பிரச்சாரம் செய்வதில் சவாலை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் சில வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகளும் தெரியும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. இப்படி இரு உலக நாடுகள் இந்தியா குறித்து கருத்துகளைக் கூறியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா பதிலடி: அதேநேரம் இந்த விவகாரத்தில் இரு உலக நாடுகளின் ரியாக்சன் ஒன்று தான்.. அதாவது அந்தந்த நாடுகளின் தூதர்களுக்குச் சம்மன் அனுப்பிய இந்தியா, அவர்களிடம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவின் உள்விவகாரம் என்றும் சட்டத்தின்படி ஒரு நாட்டில் எப்படி விசாரணை நடக்குமோ அதேபோலத் தான் விசாரணை நடக்கும் என்று இந்தியா அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
கெஜ்ரிவால் கைது விவகாரம் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் எதிரொலித்து இருப்பதையே இது காட்டுகிறது. நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், உலகின் இரு முக்கிய நாடுகள் இந்த விவகாரத்தில் கருத்துகளைக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications