பிரதமரின் கண்ணியத்தை மதிக்கிறோம்... ஆனால் சுயமரியாதையை விட்டுதர மாட்டோம்... விவசாய சங்க தலைவர் பதில்
டெல்லி: பிரதமரின் கண்ணியத்தை மதிக்கும் அதேநேரத்தில் தங்கள் சுயமரியாதையை எப்போதும் பாதுகாப்போம் என்று விவசாயச் சங்க தலைவர் நரேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் கடந்த இரண்டு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அப்போது அதில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக பல விவசாயிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரதமர் கருத்து
இந்நிலையில், குடியரசு தின வன்முறைக்கு பிறகும்கூட விவசாய சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி மத்திய அரசு தயாராகவே உள்ளதாக நேற்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும், போராடும் விவசாயிகளுடன் பேச தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் இரண்டு மாதங்களாக தலைநகரில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

விவசாயிகளை விடுவிக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு விவசாயச் சங்க தலைவர் நரேஷ் டிக்கைட் இன்று பதிலளித்துள்ளார். காசிப்பூர் போராட்ட களத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கைது செய்துள்ள விவசாயிகள் விடுவித்து, பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இந்தப் பிரச்சனையில் மரியாதைக்குரிய தீர்வை எட்ட வேண்டும். அழுத்தத்தின் கீழ் நாங்கள் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்றார்.

சுயமரியாதை முக்கியம்
மேலும், தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் பிரதமரின் கண்ணியத்தை மதிக்கிறோம். அதேபோல அரசும் நமது நாடாளுமன்றம் விவசாயிகளுக்குத் தலைவணங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதேநேரம் எங்கள் சுயமரியாதை காக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு எட்டப்பட வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

செங்கோட்டை குழப்பம்
குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் கலந்துகொண்ட சிலர் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அங்கிருந்த கொடிக் கம்பத்தில் விவசாயிகளுக்கு ஆதரவான கொடியை ஏற்றினர். குடியரசு தின வன்முறையைத் திட்டமிட்ட சிலர் நடத்தியதாக நரேஷ் டிக்கைட் குற்றஞ்சாட்டினார். மேலும், தேசியக் கொடிதான் அனைத்திற்கும் மேலானது என்றும் அதை எப்போதும் மரியாதை குறைவாக நடத்த மாட்டோம் என்றும் அவரக் கூறினார்.












Click it and Unblock the Notifications