மோடிக்கு டஃப் கொடுப்பாரா ராகுல்? 10 ஆண்டுகளுக்குப் பின் எதிர்க்கட்சி தலைவர்! அதிகாரம் என்ன?
டெல்லி: எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்தி, மோடியின் அரசியல் அனுபவத்திற்குச் சமமாக நின்று தாக்குப் பிடிப்பாரா? அவரது செயல்பாடு பாஜகவுக்கும் மோடிக்கும் நெருக்கடிகளைக் கொடுக்குமா? அல்லது ராகுலைச் சமாளித்து மோடி தனது கொடியை வழக்கம் போல் பறக்கவிடுவாரா?
கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் நிலை உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தியைக் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

இதனால் ராகுல் காந்தியின் கிரேட் உயர்ந்துள்ளது என்பது உண்மை. ஆளும் பாஜகவினரால் 'பப்பு' என்று கிண்டல் செய்யப்பட்ட ராகுல் காந்தியை தன்னுடன் சேர்த்து அழைத்துக் கொண்டுபோய் சபாநாயகர் ஓம் பிர்லாவை நாற்காலியில் அமரவைத்துள்ளார் மோடி. இதுதான் மரபு. ஆனால், அந்த மரபைக் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக மறைமுகமாக வெறுத்தது. எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு பெரும்பான்மையைத்தான் பாஜக இந்தத் தேர்தலில் முழக்கமாக முன்வைத்தது. 400க்கு மேல் என்ற கோஷம் மக்களிடம் எடுபடவில்லை.
ஆகவேதான், தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளே இல்லாத அளவுக்கு 400 இடங்களைப் பெறுவோம் என்று இலக்கை நிர்ணயம் செய்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஆற்றிய உரையில், 'ஜனநாயகத்தைக் காப்பாற்ற வலுவான எதிர்க்கட்சி தேவை' என்று மாற்றிப் பேசி இருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியைப் பெற்ற ராகுல் இனிமேல் அனைத்து கமிட்டிகளிலும் இருப்பார். ஒவ்வொன்றுக்கும் அவரது ஒப்புதலை பாஜக பெற்றாக வேண்டும். சிவிசி என்று சொல்லக்கூடிய நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தில் அவருக்கு ஒரு இடம் தரப்படும். சிபிஐ இயக்குநர் நியமனம், தேர்தல் ஆணையத்தில் இயக்குநர்களின் நியமனம், லோக்பால் தலைவர் நியமனம் என எதையும் ராகுல் ஒப்புதல் இல்லாமல் நியமிக்க முடியாது.
மோடி அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. அவர் விரும்புகின்றவர்களை இந்தப் பதவிகளில் அமர்த்த முடியும். ஆனாலும், இறுதிக்கட்ட ஒப்புதலுக்காக ராகுலிடம் மோடி சென்றாக வேண்டும். இந்தத் தகுதிகளை எல்லாம் இப்போது ராகுல் பெற்றிருப்பதே அவரது வெற்றிதான்.

முதலில் எம்பி என்பதைத்தவிர ராகுலிடம் வேறு எந்த வலிமையும் இல்லை. அப்படிப் பார்த்தால் அவரது வலிமைக்கு வலுசேர்க்கும் பல பொறுப்புகளைக் காலம் இந்த முறை அவருக்கு வழங்கியுள்ளது. காங்கிரசே இல்லாத இந்தியா என்பதுதான் பாஜகவின் முந்தைய கோஷம். ஒரு கட்சியே இருக்கக் கூடாது என்று 75 ஆண்டு அரசியல் வரலாற்றில் வேறு யாரும் வெளிப்படையான முழக்கமாக முன்வைத்ததில்லை. எதிரும் புதிருமாக வலம் வந்த ஜெயலலிதாவும் கருணாநிதியும் கூட அந்த மாதிரியான ஒரு அறிவிப்பை வெளியிட்டதில்லை.
ஆனால், மோடி தலைமையிலான பாஜக அப்படி ஒரு கோஷத்தை முன்வைத்தது. ஆனால், இன்று காங்கிரசை மக்கள் எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை வழங்கியுள்ளனர். பாஜக வலுவாக இருந்த உபி, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் கைநழுவிப் போய் உள்ளன. 18ஆவது மக்களவைத் தொடங்கி முதல் நாளே ராகுல் தன் சம்பவத்தைத் தொடங்கி இருக்கிறார். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது ராகுல் வளர்ச்சி பெற்றுள்ளார். அதே நேரம் பாஜகவும் மோடியும் வலிமையை முற்றிலுமாக இழந்துவிடவில்லை. மேலும் மோடியை எளிதாக எடைபோட்டு விட முடியாது. அவர் உறுதியான மனிதர். எந்த நேரத்திலும் தனது வியூகத்தை மாற்றி, எதிரணியை அவரால் திணறடிக்கச் செய்ய முடியும்.
இப்போதைக்கு பாஜக முழுமையாக மோடியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் பல சர்ச்சைகளை எழுப்பினார். பலரும் ஆம் ஆத்மி எழுச்சி பற்றி சொன்னார்கள். ஆனால், டெல்லி மக்களவைத் தொகுதிகள் இப்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை யோசிக்க வேண்டும். ஆக, ராகுல் வளர்ந்துள்ளார். ஆனால், மோடியின் சக்திக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் மோடிக்கு டாஃப் கொடுப்பாரா என்பது பற்றி அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் மனம் மாறி சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் ஒரு மோடி ஆதரவாளராக அறியப்பட்டவர். இப்போது ராகுல் குறித்து என்ன சொல்கிறார்?
"நாடாளுமன்றத்திற்குள் பாஜக மிகப்பெரிய சவாலை நிச்சயம் எதிர்கொள்ளும் அதில் சந்தேகமே இல்லை. சபாநாயகர் தேர்தலை ஒட்டி மிகப்பெரிய நெருக்கடியை பாஜகவுக்கு எதிர்க்கட்சி கொடுக்கும் என்று எதிர்பார்த்தேன். அந்தளவுக்கு எதிர்ப்பு ஒன்றும் எழவில்லை. அதை பாஜக சமாளித்துவிட்டது என்றே சொல்லலாம். தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவிடம் சில துறைகளைக் கேட்டு அழுத்தம் கொடுக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்தன. அப்படி எதுவுமே நடக்கவில்லை.
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றிருப்பது முன்பே பலரும் எதிர்பார்த்ததுதான். இந்த முறையும் அவர் தனக்கான வாய்ப்பை வேண்டாம் என நழுவவிட்டிருந்தால், பிறகு எப்போதுமே அவருக்குச் சரியான சந்தர்ப்பம் வாய்க்காமல் போகலாம். இது சரியான நேரம். இந்த முடிவை ராகுல் எடுத்திருப்பது சரி. ஆனால், எந்தளவுக்கு அவை சுமுகமாக நடக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உதாரணமாக, கடந்த 50 ஆண்டுகள் முன்பு நடந்த எமர்ஜென்சி பற்றி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்று புரியவில்லை. சபா நாயகர் ஓம் பிர்லா எமர்ஜென்சி பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?
பாஜக எமர்ஜென்சியைக் கண்டித்துக் கொண்டு வந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்திருக்க வேண்டும். அப்போதுதான் எமர்ஜென்சிக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட சில மோசமான சட்டங்கள் பற்றியும் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் பற்றியும் கூட சேர்த்து விவாதித்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால், ஆளும் கட்சிக்கு அவமானமாக மாறியிருக்கும். அந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் நழுவ விட்டுவிட்டன.
கட்டாயம் கடந்த 17 ஆவது மக்களவையைப் போல இந்த 18 ஆவது மக்களவை இருக்காது. பிரதமர் மோடி பற்றி இருந்த பிம்பம் மெல்லக் குறைந்துவிட்டது. ஆகவே, அவர் முன்பைப்போல தைரியமான முடிவுகளை எடுக்க முடியாது. அடுத்த 5 மாதங்களில் 3 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் வர உள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா அக்டோபரில் வர உள்ளது. ஜார்கண்ட்டில் டிசம்பரில் நடக்க உள்ளது. இப்போது உள்ள நிலைமையை வைத்துக் கணக்கிட்டால், மகாராஷ்டிராவிலும் ஹரியானாவிலும் பாஜக வெற்றி பெறுவது கடினம். அப்படித் தோல்வியடைந்தால் அது மத்திய அரசுக்கும் மோடிக்கும் பெரிய இடியாக வந்து இறங்கும்.
வெறும் எதிர்க்கட்சிகள் மட்டும் கேள்வி எழுப்பாது. பாஜகவுக்குள்ளாகவே சில தலைவர்கள் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications