"ராகுல் காந்தி பிரதமராக எல்லா தகுதியும் இருக்கு, ஆனா.." கடைசியில் ட்விஸ்ட் வைத்த பிரியங்கா காந்தி
டெல்லி: இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி பதவியேற்பாரா என்ற கேள்விக்கு அவரது சகோதரி பிரியங்கா காந்தி வெளிப்படையாகப் பதில் அளித்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த முறை பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நடந்து வருகிறது. இரு தரப்பிலும் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பிரதமர் வேட்பாளர்: இதில் பாஜகவில் மோடி தான் பிரதமர் வேட்பாளர்.. ஆனால் இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாஜக தலைவர்கள் இது தொடர்பாகத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே ராகுல் காந்தி பிரதமர் பதவியேற்பாரா என்ற கேள்விக்கு ராகுல் காந்தி வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
பிரியங்கா காந்தி: ராகுல் காந்தி ஒரு சிறந்த பிரதமராக இருப்பார் என்றும் அவர் எப்போதும் மக்களுக்காகவே நிற்பார் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். மேலும், நாட்டின் நாடித் துடிப்பை ராகுல் காந்தி புரிந்து கொண்டுள்ளார் என்பதால் அதுவே பிரதமர் பதவிக்கு அவரை சரியான நபராக மாற்றுவதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்தியா டுடே ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, "அவரால் ஏன் பிரதமராக முடியாது? நாட்டின் நாடித்துடிப்பைப் புரிந்துகொண்டுள்ளார். இதனாலேயே அவர் சிறந்த பிரதமராக வருவார்.
உண்மையை மட்டுமே பேசுவார்: அவருக்கு இந்து தர்மம் பற்றி விரிவாகத் தெரியும். பிரதமர் மோடி இந்து தர்மம் குறித்து விவாதம் நடத்த வந்தாலும் ராகுல் காந்தியிடம் மோடியால் பேச முடியாது.. ராகுல் காந்தி யாருக்கும் பயப்பட மாட்டார்.. யாரைக் கண்டும் அஞ்சிவிட மாட்டார்.. ராகுல் எப்போதும் உண்மையைத் தான் சொல்வார் என்பது இப்போது நாட்டு மக்களுக்குத் தெரிந்து இருக்கிறது.
என்னை பொறுத்தவரை நாட்டிலேயே வேறு எந்தத் தலைவரும் இந்தளவுக்குக் குறிவைத்துத் தாக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். பாஜக தொடங்கி பல்வேறு தலைவர்கள் ராகுலைப் பல மூலைகளிலிருந்தும் தாக்குகிறார்கள். ராகுல் மீது பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். எம்பி பதவியைப் பறித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப் பார்த்தார்கள். வீட்டைக் கூட பறித்துக் கொண்டார்கள். நாடு முழுக்க ராகுல் காந்திக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்தார்கள். ஆனால், அனைத்தையும் தாண்டி ராகுல் காந்தி எழுந்து நின்றார்" என்றார்.
ட்விஸ்ட் வைத்த பிரியங்கா காந்தி: தொடர்ந்து பிரதமர் பதவி குறித்துப் பேசிய பிரியங்கா காந்தி, "அதேநேரம் இந்தத் தேர்தலை நாங்கள் இந்தியா கூட்டணியாகச் சந்திக்கிறோம். எனவே, அடுத்த பிரதமர் யார் என்பதை இந்தியா கூட்டணி தலைவர்கள் இணைந்தே முடிவு செய்வார்கள்.. யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம்" என்றார்.
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் என்றும் பிரியங்கா காந்தி உறுதியளித்தார்.. மேலும், அமேதியில் இருந்து காங்கிரஸ் விலகிவிடவில்லை என்ற பிரியங்கா காந்தி, இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வலிமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications