"வெற்றியும், தோல்வியும் சகஜம்.." ஸ்மிருதி இரானிக்கு சப்போர்ட்டாக வந்த ராகுல் காந்தி.. என்ன மேட்டர்?
டெல்லி: முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்ததால் அவர் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். இதனால் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் ஸ்மிருதி இரானியை சமூக வலைத்தளங்களில் நக்கலடித்தனர். இந்தச் சூழலில் தான் ஸ்மிருதி இரானிக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி இந்த முறை தோல்வியடைந்தார்.

அங்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் சோனியா காந்தியின் தீவிர ஆதரவாளருமான கிஷோரி லால் சர்மா 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ல்மிருதி இரானியை வீழ்த்தினார்.
மத்திய அரசு அறிவுறுத்தல்: இதையடுத்து அவர் டெல்லி லுட்யேன்ஸில் உள்ள துக்ளக் கிரசன்ட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்தார். தேர்தலில் தோல்வியுற்ற அல்லது போட்டியிடாத முன்னாள் அமைச்சர்கள் மற்றும் லோக்சபா எம்பிக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ஜூலை 8-10 ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
ஒருவேளை கடைசி தேதிக்கு பிறகும் முன்னாள் எம்பிக்கள் தங்கள் அதிகார்பூர்வ இல்லத்தை காலி செய்யவில்லை என்றால் மட்டுமே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது வழக்கமான நடைமுறை தான் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஸ்மிருதி இரானி: அதைத் தொடர்ந்தே ஸ்மிருதி இரானி தனது பங்களாவை காலி செய்தார். இதை வைத்து இணையத்தில் பலரும் ஸ்மிருதி இரானியை விமர்சித்தனர். குறிப்பாகக் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஸ்மிருதி இரானி பயங்கரமாக நக்கலடித்துள்ளனர். ஒரு சிலர் எல்லையை மீறியும் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் ஸ்மிருதி இரானியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்யக் கூடாது என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி அறிவுறுத்தல்: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அனைவரது வாழ்க்கையிலும் வெற்றி, தோல்வி என இரண்டும் வரும். எனவே, ஸ்மிருதி இரானி உட்பட எந்தத் தலைவரையும் கேவலமாகப் பேசுவதையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒருவரை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளமே தானே தவிர பலத்தின் அடையாளம் இல்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
லோக்சபா தேர்தல்: கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேநேரம் 2019இல் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வென்றதால் அவர் எம்பியாக தொடர்ந்தார்.
2024 லோக்சபா தேர்தலில், ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் எம்பியாக இருக்க முடியாது என்பதால் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவார் எனக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications