ம.பி, ராஜஸ்தானில் காங்கிரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குவோம்.. இது மாயாவதியின் புத்தாண்டு மிரட்டல்
டெல்லி: மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்டோர் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் காங்கிரஸ் கொடுத்து வரும் ஆதரவை விலக்கி கொள்வோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச அரசுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்து வருகிறது. அக்கட்சியின் ஒரேயொரு எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி காங்கிரஸ் கொடுக்கவில்லை. இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கட்சிக்கு தமது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
காங்கிரசின் இத்தகைய போக்கு தமக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்று அவர் கூறியிருந்தார். இந் நிலையில், இதுபோன்றதொரு அதிருப்தியை காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரான மாயாவதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ஆதரவை விலக்கி கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராகவும், வன்கொடுமைகளுக்கு எதிராகவும் மக்களும், விவசாயிகளும் பாரத் பந்த் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடிய, ஒன்றும் அறியாத அந்த மக்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அந்த வழக்குகள் அனைத்தும் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசால் பதியப்பட்டவை. தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள காங்கிரஸ் அரசானது அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் இந்த முக்கிய விவகாரத்தில் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு அந்த வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால், வெளியில் இருந்து காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று மாயாவதி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 எம்எல்ஏக்களும், மத்தியப்பிரதேசத்தில் 2 எம்எல்ஏக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications