"நீங்கள் கொடுமையானவர்".. சனாதன தர்ம வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் - உதயநிதி வழக்கறிஞர் இடையே மோதல்
டெல்லி: சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் திமுகவை சேர்ந்த எம்பியும், வழக்கறிஞருமான பி வில்சன் ஆகியோர் இடையே காரசார விவாதம் நடந்தது. அதுபற்றிய விபரம் வருமாறு:
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. அதாவது சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‛‛சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும்'' என்று கூறினார். இந்த பேச்சுக்கு பாஜக, இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது. அதன்பிறகு நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வில் விசாரணை நடத்தினர். அப்போது உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொண்டு புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது. தொடர்ந்து புகார்களைப் பதிவு செய்து கொண்டே போக முடியாது" எனக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடை தொடரும் எனக்கூறிய உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான திமுக எம்பியும், வழக்கறிஞருமான பி வில்சன் மற்றும் மகாராஷ்ரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அதாவது நேற்றைய வழக்கு விசாரணையின்போது உதயநிதி ஸ்டாலின் சார்பில் அபிஷேக் மான்வி சிங்வி, பி வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.
அபிஷேக் மான்வி சிங்வி சார்பில், ‛‛அர்னாப் கோஸ்வாமி, நுபுர் ஷர்மா உள்ளிட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்கள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகள் ஒரே இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதில் நுபுர் ஷர்மா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். இப்படியான சூழலில் உதயநிதி ஸ்டாலின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகாவிற்கு மாற்றம் செய்ய வேண்டும்'' என்று வாதாடினார்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‛‛சனாதன தர்மம் தொடர்பாக ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உதயநிதி பேசியுள்ளார். பொறுப்பற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். டெங்கு, மலேரியா கொசுக்களை அழிப்பதுபோல அழிக்க வேண்டும் என்றும், சனாதனத்தை அடியோடு வேரறுக்க வேண்டும் எனவும் வெறுப்பு பேச்சு பேசியுள்ளார், நாங்கள் தமிழகத்துக்கு எதிரானவர்கள் கிடையாது. ஆனால் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளுக்கு எதிரானவர்கள்'' என்றார்.
இந்த வேளையில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி வில்சன், ‛‛நான் சொலிசிட்டர் ஜெனரலை எங்கள் மண்ணான தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்ல விரும்புகிறேன். என்னால் சட்டப்பூர்வமான வாதங்களை எதிர்கொள்ள முடியும். ஆனால் அரசியல்வாதங்களை எதிர்கொள்ள முடியாது. சொலிசிட்டர் ஜெனரல் அரசியல் சார்ந்த கருத்துகளை நீதிமன்றங்களில் முன்வைக்கிறார்'' என்றார். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‛‛இந்த வார்த்தைகள் உங்கள் மண்ணில் சொல்லப்பட்டன. நான் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பேச முடியாது. நான் இந்த நீதிமன்றத்தை மட்டுமே பேசுகிறேன்'' என்றார்.
இதற்கு அபிஷேக் மனு சிங்வி, ‛‛நீங்கள் தனியாக புகார் வழங்கியவர்களை மிகவும் கொடுமையானவர்'' என்று கூறினார். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‛‛ஆம், ஒப்புக்கொள்கிறேன்'' என்று கூறினார். அதற்கு வழக்கறிஞர் வில்சன், ‛‛நீங்கள் உங்களின் பணிக்கான கட்டுப்பாட்டை மீறுகிறீர்கள்'' என்று கூறினார். இப்படியாக உச்சநீதிமன்றத்தில் விவாதம் என்பது நடந்தது.
இதையடுத்து நீதிபதிகள், ''நாங்கள் இந்த விஷயத்தில் தற்போது எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. வழக்கில் அனைத்து எதிர் மனுதாரர்களும் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் பிறப்பிக்கிறோம். அதேநேரம் சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக எந்த வழக்கும் பதியக்கூடாது'' என தடை விதித்து விசாரணையை ஏப்.21-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications