ZyCoV-D கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோருகிறது சைடஸ் கேடிலா! டெல்டா வைரஸிலிருந்து பாதுகாக்கும்!
டெல்லி: ZyCoV-D (சைகோவ்-டி) கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி சைடஸ் கேடிலா நிறுவனம் (Zydus Cadila) மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. இந்த ZyCoV-D கொரோனா தடுப்பூசியானது புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டவை என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா 2-வது அலை தாக்க தொடங்குவதற்கு முன்னரே நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. முதல் கட்டமாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 30 கோடிக்கும் அதிகமானோருக்கு இந்த இரு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதேபோல 4-வது தடுப்பூசியாக அமெரிக்காவின் மாடர்னா (Moderna) தடுப்பூசியை போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் நிறுவனம்
இந்த நிலையில் குஜராத்தின் அகமதாபாத் அருகே சங்கோதர் பகுதியில் இயங்கி வரும் சைடஸ் கேடிலா நிறுவனம் ZyCoV-D என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. ZyCoV-D கொரோனா தடுப்பூசியின் 3 கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்துள்ளன. மொத்தம் 28,000 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இவர்களில் 1,000 பேர் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர்.

சைகோவ்-டி தடுப்பூசி
ZyCoV-D கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் முழு அளவில் உள்ளது என்றும் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களில் இருந்து முழுமையான பாதுகாப்பு அளிக்கக் கூடியது என்றும் சைடல் கேடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் முதல் கட்டமாக அவசர பயன்பாட்டுக்கு ZyCoV-D கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கோரி சைடல் கேடிலா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

5-வது கொரோனா தடுப்பூசி
டெல்டா வகை வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்த சூழ்நிலையில் ZyCoV-D கொரோனா தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனால் ZyCoV-D கொரோனா தடுப்பூசியை அவசரகாலத்துக்கு பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என தெரிகிறது. ZyCoV-D -க்கு அனுமதி கிடைத்தால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 5-வது கொரோனா தடுப்பூசியாக இது இருக்கும். மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்தால் ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கவும் சைடஸ் கேடிலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications