சைடஸ் கேடில்லா வேக்சின்: அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி
டெல்லி: சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் மூன்று டோஸ் கொரோனா வேக்சினுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் சைடஸ் கேடில்லா வேக்சினை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. வல்லுநர் குழு பரிந்துரையை அடுத்து இந்த வேக்சினுக்கு அவசர அனுமதி கிடைத்துள்ளது.
சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் மூன்று டோஸ் வேக்சினுக்கு மட்டுமே இந்த அனுமதி கிடைத்துள்ளது. இதன் இரண்டு டோஸ் வேக்சினுக்கு அனுமதி தர வேண்டும் என்றால் கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. ZyCoV-D என்று அழைக்கப்படும் இந்த வேக்சின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டிஎன்ஏ வகை கொரோனா வைரஸ் ஆகும் இது. உலகில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த முதல் டிஎன்ஏ வேக்சின் ஆகும் இது. கடந்த ஜூலை 1ம் தேதி இந்த நிறுவனம் சைடஸ் கேடில்லா 3 டோஸ் வேக்சினுக்கான கடைசி கட்ட சோதனைகான முடிவுகளை வெளியிட்டது. மொத்தம் 28 ஆயிரம் பேரிடம் சோதனை செய்யப்பட்டு இதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் இந்த வேக்சினின் எதிர்ப்பு திறன் 66.6 சதவிகிதம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சைடஸ் கேடில்லா
கேடில்லா நிறுவனம் தங்களின் சைடஸ் கேடில்லா வேக்சின் 12 முதல் 18 வயது கொண்டவர்களிடமும் அதிக ஆற்றல் கொண்டது என்று தெரிவித்துள்ளது. இந்த வேக்சின் சோதனை முடிவுகள் மீதான முழுமையான ஆய்வுகளை இன்னும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் செய்யவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் சோதனை முடிவுகளின் அடிப்படையில் சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் மூன்று டோஸ் கொரோனா வேக்சினுக்கு அவசர அனுமதி கொடுத்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டிஎன்ஏ
அகமதாபாத்தில் உள்ள இந்த நிறுவனம் உருவாக்கி இருக்கும் ZyCoV-D டிஎன்ஏ வேக்சின் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எல்லாம் மிகவும் பாதுகாப்பான முடிவுகளை கொடுத்துள்ளது, பொதுவாகவே டிஎன்ஏ வேக்சின் அதிக பாதுகாப்பு கொண்டது. கொரோனா வைரஸின் ஜீன்கள் பிரதி எடுக்கப்பட்டு அதன் டிஎன்ஏவை வைத்து இந்த வேக்சின்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல் மியூட்டேட் ஆகும் வேக்சின்களுக்கு எதிராக இந்த டிஎன்ஏ வேக்சினை உடனே மாற்றி, அப்டேட் செய்து கொண்டே இருக்க முடியும் என்பதால் இது வரும் நாட்களில் அதிக பலன் அளிக்க கூடியது.

இதற்கு முன்
இதற்கு முன் இந்தியாவில் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் வேக்சினுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வேக்சினுக்கு அனுமதி பெற்றதால் இரண்டு மாதங்களில் உற்பத்தியை அதிகப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனுமதி
இதை ஊசி இல்லாமல் needle-free injector மூலம் உடலுக்குள் செலுத்த முடியும். அதாவது ஊசி போன்ற முனை இல்லாமலே இன்ஜெக்டர் மூலம் இதை உடலில் செலுத்த முடியும். மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் இதற்கு அனுமதி அளித்ததும் இதன் 5 கோடி டோஸ்களை இந்த வருட இறுதிக்குள் உருவாக்குவோம் என்று கேடில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வேக்சினை மிக மிக குளிர்ந்த வெப்பநிலையில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை 2-8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் 3 மாதங்கள் வரை வைக்க முடியும்.












Click it and Unblock the Notifications