காவு வாங்கிய டெங்கு காய்ச்சல். தருமபுரியில் 4 வயது சிறுமி மரணம்.. ஆவடியில் காய்ச்சலுக்கு சிறுமி பலி
தருமபுரி: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். ஆவடியில் 2 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக மரணமடைந்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின வழிகாட்டுதலின் படி டெங்கு பரவலைக் குறைக்க எல்லா மாநிலங்களும் தீவிர நடிவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடைபெறும் என அளிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விட நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்குவால் 4,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்வரும் மூன்று மாதங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் 4 வயது மகள் அபிநீதி என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் தம்பியும் சகோதரியும் டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஆவடியில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜித் கல்பனா தம்பதியினர் ஆவடியில் வசித்து வந்தனர் அவர்களின் 2 வயது குழந்தை டிபிஹன் உயிரிழந்துள்ளார். ஆவடியில் குடும்பத்தினரோடு வசித்து வந்த சிறுமி 5 நாட்களால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி இன்று காலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications