ஒகேனக்கல் நீர்வரத்து 57,000 கனஅடியாக அதிகரிப்பு.. அருவிகளில் வெள்ளம்.. சுற்றுலா பயணிகளுக்கு தடை
தருமபுரி: கர்நாடகாவில் கனமழை அதிகரித்துள்ளதால் அங்குள்ள அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் மூன்றாம் நாளாக குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆறு பிறந்து தமிழகத்தின் வழியாக கடலை சேர்கிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

அதாவது குடகு, மைசூர், மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு 80 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது இந்த உபரிநீரானது தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலூவிற்கு வரத் தொடங்கியது .
இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரத்து கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் மூன்றாம் நாளாக குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மாவட்ட நிர்வாகம் குளிப்பதற்கு தடை விதித்துள்ளதால் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் நீர்வளத்துறை துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா தலத்தில் ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து பெய்யும் கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல் மேகதாது, கனகபுரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியின் துணை நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications