தடதடக்கும் தருமபுரி.. பாட்டி வீட்டுக்கு வந்த 6 வயது சிறுமி.. நாட்டுவெடி வெடித்ததில் உடல் சிதறி பலி
தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் பொங்கல் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்குச் சென்ற 6 வயது சிறுமி நாட்டுவெடி வெடித்து உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு வாங்கப்படும் பட்டாசுகள் மீதமானால் அதனை எடுத்து வைத்து கார்த்திகை தீபம், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வெடிப்பது வழக்கம். வீடுகளுக்குள் எளிதில் தீப்பற்றும் பொருள்கள் மற்றும் பட்டாசு போன்ற வெடிபொருள்களை வைக்க கூடாது. அதேபோல, குழந்தைகள் எளிதில் எடுக்கும் வகையிலான இடங்களில் வைக்கக் கூடாது என்று தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இருப்பினும், தீபாவளிக்கு மீதமாகும் பட்டாசுகளை பொதுமக்கள் தொடர்ந்து வீட்டுக்குள் வைப்பதும், அதனால் சில நேரங்களில் விபத்து மற்றும் உயிரிழப்புச் சம்பங்களும் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பொங்கல் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்குச் சென்ற 6 வயது சிறுமி நாட்டுவெடி வெடித்து உடல் சிதறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த கவிநிலா என்ற 6 வயது சிறுமி பொங்கல் விடுமுறைக்காக காரிமங்கங்கலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச சென்றுள்ளார். அப்போது, பாட்டி வீட்டின் மொட்டை மாடியில் சுவர் ஓரமாக சாக்குப் பையின் மீது ஏறி குதித்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த சாக்குப் பையில் தீபாவளிக்காக வாங்கி மீதமிருந்த நாட்டு வெடிகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், உராய்வு காரணமாக நாட்டுவெடி வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இதில், சிறுமி கவிநிலாவின் ஒரு கை துண்டாகி நெஞ்சுப் பகுதியில் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மொட்டை மாடியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது. பொங்கல் விடுமுறைக்காக குடும்பத்துடன் வந்த நிலையில் நாட்டுவெடி வெடித்து சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications