வங்கியில் இந்தியை திணிக்காதீர்கள்.. மீறினால் அரசாணை வரும்! - திமுக எம்பி செந்தில்குமார் எச்சரிக்கை
தருமபுரி: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தியை திணிக்கக்கூடாது என்றும், மாநில மொழிகளையே பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணை வெளியிடும் சூழலுக்கு தள்ள வேண்டாம் எனவும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய கடன் வழங்கும் விழாவில் திமுக எம்.பி. செந்தில்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "வங்கி மேலாளர்கள், வங்கி ஊழியர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதையே பார்க்க வேண்டும்.
நான் எந்த வங்கிக்கும் சென்றதில்லை. இதுவரைக்கும் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தியது கிடையாது. ஏனென்றால் காவல் நிலையத்துக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் அதிக அச்சத்துடன் செல்லக்கூடிய இடமாக வங்கி உள்ளது.

பணிவுடன் மக்களுக்கு உதவுங்கள்
அதற்கு வங்கி மேலாளர்களும் அவர்களுக்கு கீழ் இருக்கக்கூடிய ஊழியர்களுமே காரணமாவார்கள். அனைவரையும் அப்படி சொல்லிவிட முடியாது, ஆனால், பெரும்பாலானவர்கள் அப்படிதான் இருக்கிறாகள். மக்களிடம் ஒரு அதிகாரத்துடனே நடந்துகொள்கிறார்கள். எனவே போலீசாருக்கு அடுத்தபடியாக மக்கள் பயப்படுவது வங்கி மேலாளர்களை கண்டுதான்.

எனக்கே வங்கி பற்றி தெரியாது
குறைவான வங்கி ஊழியர்கள்தான் பணிவோடு நடந்துகொள்ளும் சூழல் இருக்கிறது. அது மாற வேண்டும். பணிவாக நடந்துகொண்டால் மக்கள் நம்மை மதிப்பார்கள். நம்மை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்வது பணிவுதான். ஏனென்றால் அனைவருக்கும் வங்கி குறித்த அறிவு இருக்காது. ஒரு எம்.பியாக இருக்கும் எனக்கே அதுபற்றி அதிகம் தெரியாது.

இந்தியை திணிக்காதீர்கள்
தமிழ்நாட்டில் மற்றொரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தி இடம்பெற்று உள்ளது. தயவு செய்து இந்தியை தமிழாக்கம் செய்து வையுங்கள். இங்கு ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தால்கூட அதை எப்படி படிக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது. இங்கு வந்திருக்கும் 90% பேர் யாருக்கும் தெரியாது.

யாரும் இந்தி கற்க மாட்டோம்
வங்கி மேலாளர்கள் வட இந்தியாவிலிருந்து யாராவது வந்திருந்தால் இந்தி தெரிந்திருக்கும். தயவு செய்து தமிழ்நாட்டுக்கு வரும்போது இந்தியை தமிழாக்கம் செய்து மக்களுக்கு புரியும் வகையில் வைத்திடுங்கள். இங்கு இந்தி யாருக்கும் தெரியாது. யாரும் கற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அந்த வெறுப்பும் உங்கள் மீதுதான் வரும். எனவே அரசாணை பிறப்பிக்கும் நிலைக்கு கொண்டு வந்துவிடாதீர்கள்.

அரசாணை வரும்
இதே நிலை தொடர்ந்தால் வங்கிகளில் மாநில மொழிகளைதான் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு அரசாணை பிறப்பிக்கப்படலாம். அல்லது உங்கள் வங்கியே வேண்டாம், உங்கள் ஊரில்போய் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அரசை தள்ளிவிடாதீர்கள். தயவு செய்து மக்களுக்கு புரியும் அளவுக்கு தாய்மொழியை பயன்படுத்துங்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications