காவிரி: 26,000 கன அடி நீரை திறந்த கர்நாடகா! தமிழக எல்லை பிலிகுண்டுலுவில் நீர் வரத்து 13,000 கன அடி!
தருமபுரி: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நதிநீர் வரத்து வினாடிக்கு 13,000 கன அடியாக உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் கர்நாடகாவின் கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகரில் இருந்து 1,000 கன அடி மற்றும் கபினியில் இருந்து 25,000 கன அடி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறக்க முடியாது என வம்படியாக பேசி அடம்பிடித்தனர் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர். காவிரியில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் 1 டிஎம்சி நீர் ( 11,500 கன அடிநீர்) திறக்க வேண்டும் என்பதுதான் காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் உத்தரவு. இதனை ஏற்க மறுத்துதான் அடம்பிடித்தது கர்நாடகா. அத்துடன் 8,000 கன அடி நீரைத்தான் திறப்போம் என கொக்கரித்தார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்.

இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்து சட்டசபை கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி அணைகளில் இருந்து கர்நாடகா மொத்தம் 26,000 கன அடி நீரை உபரி நீராக திறந்துவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்திருப்பதால் வினாடிக்கு 1,000 கன அடிநீர் திறக்கப்படுகிறது. கபினி அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்திருப்பதால் வினாடிக்கு 25,000 கன அடிநீரை அப்படியே கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து கர்நாடகா திறந்துவிட்ட உபரி நீரில் 13,000 கன அடிநீர் தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுலு அருகே வந்தடைந்தது. காவிரி அணைகளில் இருந்து கர்நாடகா கூடுதல் உபரி நீரைத் திறக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது. இதனால் ஒகேனக்கல் பாறைகளில் அருவிகள் ஆர்ப்பரிக்கின்றன. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் உயர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications