சாவு இப்படியெல்லாம் வருமா.. விளையாடிய போது சரிந்து விழுந்து இறந்த வட்டாட்சியர்.. முதல்வர் அதிர்ச்சி
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதல் அமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 'முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இன்று (பிப்ரவரி 20) நண்பகல் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகள் முகாம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த அதியமான் இறகு பந்து போட்டியில் கலந்துக்கொண்டு விளையாடினார்.

விளையாடிக்கொண்டிருந்த போதே வட்டாட்சியர் அதியமானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடன் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மற்றும் காவலர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அதியமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விளையாட்டு போட்டியின் போது வட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் தருமபுரி மாவட்ட அரசு அதிகாரிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே தர்மபுரி வட்டாட்சியர் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் அதியமான் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. வட்டாட்சியர் அதியமானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications