கலெக்டர் - எஸ்பியே நான் சொல்றதை தான் கேட்கனும்.. ஆடியோ வெளியானதால் பணிந்த திமுக மாவட்ட செயலாளர்
தர்மபுரி: ‛‛நான் சொல்றதை கேட்கலைனா அந்த அதிகாரி இருக்கமாட்டான். கலெக்டர், எஸ்பி நான் சொல்றதை தான் கேட்க வேண்டும். கேட்கவில்லை என்றால் அவங்க இருக்கமாட்டாங்க'' என்று தர்மபுரி கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ வெளியான நிலையில் அவர் ‛‛ கட்சியினரை திருப்திப்படுத்த அப்படி பேசிவிட்டேன். இனி அப்படி பேசமாட்டேன்'' என்று பணிந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக திமுக 2 மாவட்டங்களை உருவாக்கி உள்ளது. திமுகவை பொறுத்தவரை தர்மபுரி மேற்கு மாவட்டம், கிழக்கு மாவட்டம் என்று 2 மாவட்டங்கள் உள்ளன.

இதில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக தடங்கம் சுப்பிரமணியம் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரிடம் இருந்து அந்த பொறுப்பு பறிக்கப்பட்டது.
தடங்கம் சுப்பிரமணியத்துக்கு பதில் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி என்பது தர்மசெல்வன் என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் பென்னாகரம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்தவர். தற்போது மாநில செயற்குழு உறுப்பினரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் மாவட்ட செயலாளர் பதவி அவரை தேடிச் சென்றது.
இந்நிலையில் தான் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மசெல்வன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் கலெக்டர், எஸ்பியே நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இருக்கமாட்டார்கள் என்று மிரட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான ஆடியோவில் தர்மசெல்வன் பேசியதாக இருப்பதாவது: ‛‛நான் சொல்றதை கேட்கலைனா அந்த அதிகாரி இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது. நீங்கள் நினைக்கிற ஆளுங்கள் எல்லாம் சொல்லி யாரையும் மாற்ற முடியாது. நான் லட்டர் வைத்தால் தான் மாற்ற முடியும். அதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சரியுங்களா? கலெக்டர் நான் சொல்லறதை தான் கேட்க வேண்டும். எஸ்பி நான் சொல்றதை தான் கேட்க வேண்டும். அத்தனை அதிகாரிகளும் நான் சொல்றதை தான் கேட்க வேண்டும். கேட்கவில்லை என்றால் அவங்க இருக்கமாட்டாங்க. இதை நான் செய்வேன்'' என்று உள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தர்மசெல்வன் தலைமையில், தருமபுரியில் உள்ள தனியார் உணவகத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் இப்படி பேசியதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியான நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி பழனிச்சாமி, ‛‛இது போன்ற மிரட்டல்கள் தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் அரங்ககேற்றப்பட்டு வருகிறது.திமுக ஆட்சியில், குறுநில
மன்னர்களைப் போன்று செயல்படும் மாவட்ட செயலாளர்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பது கடும் கண்டனத்திற்கு உரியது'' என்று விளாசி இருந்தார். அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ‛‛கலெக்டர், எஸ்பியை மிரட்டுவது தான் திராவிட மாடலா? பத்தாம் வகுப்பு கூட படிக்காத ஒருவர், மாவட்ட ஆட்சியரையும், காவல் துறை கண்காணிப்பாளரையும் மிரட்டும் வகையில் பேசுவது அரசு எந்திரத்தின் மீது அவமரியாதையான தாக்குதல்'' என்று தாக்கியிருந்தார்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தர்ம செல்வன் வருத்தம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர், ‛‛ கட்சியினரை திருப்திப்படுத்த அப்படி பேசினேன். அப்படி பேசியிருக்க கூடாது. வரும் காலத்தில் அப்படி பேச மாட்டேன். இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இனி அப்படி பேசமாட்டேன்'' என்று பணிந்துள்ளார்.












Click it and Unblock the Notifications