பப்ளிக் மீட்டிங்கில் வார்த்தையை விட்ட முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
தருமபுரி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி பொதுக்கூட்டத்தில் தரக்குறைவாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி மாவட்ட திமுகவினர் இன்று மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தனர்.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி, தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அரூர் கச்சேரி மேட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பங்கேற்று பேசினார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்தக் கூட்டத்தில் பேசும்போது, "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்குவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் தற்போது தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் என ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் 50% மேல் உள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஒரே நேரத்தில் 2000 மினி கிளினிக்குகளை திறந்து வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்தத் திட்டத்தை முழுமையாக மூடியது ஸ்டாலின்" என அச்சில் ஏற்ற முடியாத ஒரு வார்த்தையை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார் கே.பி.அன்பழகன். தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் கேபி அன்பழகன் ஒருமையில் பேசிய சம்பவம் பொதுக்கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மீது திமுக வழக்கறிஞர் அணி போலீசில் புகார் அளித்துள்ளது. அதிமுக பொதுக்கூட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவதூறாகவும், கண்ணியக் குறைவாகவும் பேசினார். எனவே, அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வீடியோ ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி மற்றும் இரு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதமிடம் புகார் மனுவை அளித்தனர். முதல்வர் ஸ்டாலின் பற்றி ஒருமையில் பேச முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications