வாழைப்பழம்..ஊதுபத்தி..நெத்தியில் காசு.. சைக்கிள் ஓட்டி வந்த பிணம்..! திடுக்கிட்டு போன திண்டுக்கல்..!
திண்டுக்கல் : ரீல்ஸ் மோகம் தற்போது கண்ணை மட்டுமல்ல மானம், மரியாதை, உடை எதையுமே பார்க்காது போல. அற்ப லைக்குகளுக்காக எந்த விதமான நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் சிலர் என்பதை நிரூபித்திருக்கிறது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ..
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் சிறிய சிறிய வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் தான் ஒரு பிரபலமான நபராக மாற வேண்டும் என பல இளைஞர்கள் இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் உலாவுவதை பார்க்க முடிகிறது.

டிக்-டாக் வந்த பிறகு திடீர் செலிப்ரட்டிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ஜிபி முத்து, திருச்சி சாதனா போன்றவர்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என பலரும் பாராட்டிய நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அது ஆபாசமாக மாறத் தொடங்கியது.
சிக்கும் இளைஞர்கள்: இதையடுத்து பல நிறுவனங்கள் அதாவது பேஸ்புக் போன்றவையே சார்ட் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கின. இதையடுத்து பலரும் தங்கள் வீடியோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சமையல் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், கணவன் மனைவி நடனம், இசை என தொடர்ந்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வரும் இளைஞர்கள் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது ஒரு புறம் இருக்க டாஸ்க் வீடியோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

டாஸ்க் சேனல்கள்: தங்கள் வீடியோக்களில் கமெண்ட் செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யச் சொன்னால் அதை செய்து காட்டும் இன்ஃப்ளுயன்சர்கள் அதனையும் ஒரு ஷார்ட்ஸ் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர் ஒருவர் 'பண்ணிடுவோம்' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் உணவகத்திலும் திண்டுக்கல்லில் உள்ள பிரபல திரையரங்கிலும் வேலை செய்து வருகிறார்.
பண்ணிடுவோம் அபீஸியல்: அவரது வீடியோவை பார்க்கும் நபர்கள் கொடுக்கும் டாஸ்க்கை செய்து முடிப்பது தான் 'பண்ணிடுவோம் ஆபீஸியல்' சேனலின் டாஸ்க். இந்த நிலையில் அந்த இளைஞர் செய்த செயல் தான் சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் கஷ்டப்பட்ட இளைஞர்கள் இவ்வளவு திறமையா என பலரும் அவரை பாராட்டினர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.

பிணம் போல் மேக்கப்: அவரது வீடியோவில் கமெண்ட் செய்த ஒருவர் நீங்கள் பிணம் போல சாலையில் செல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதை பண்ணிடுவோம் என்ன சொல்லி அந்த இளைஞர் சைக்கிளில் வாழைப்பழம் ஊதுபத்தி சொருகிவிட்டு பிணம் போல மேக்கப் போட்டுக் கொண்டு சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்றார். என்ன இது கொடுமை என சாலையில் சென்ற பலரும் தலையில் அடித்தபடி சென்றனர். அதையும் ஒரு வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் அந்த இளைஞர்.
கடும் கண்டனம்: ரீல்ஸ்காக என்ன வேணா செய்யலாம் அதுக்குன்னு பொதுமக்கள் நடமாடும் ஒரு இடத்தில் இப்படியா நடந்துக்குவீங்க என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திறமையை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என்ற பெயரில் பொது இடங்களில் இது போன்று அநாகரீகமாக நடந்து கொள்ளும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக சமூக வலைதளங்கள் இருக்கும் நிலையில் அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் வெறும் லைக்குகளுக்காகவும் கமெண்ட்களுக்காகவும் இதுபோல நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குரியது என்கின்றனர் சமூக வலைதள வாசிகள்.












Click it and Unblock the Notifications