“திண்டுக்கல்லை தளபதியின் கோட்டையாக்குவோம்..” தவெக தொண்டர் உறுதி! சுயேட்சையாக போட்டி
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியின் தொண்டர் ஒருவர் திண்டுக்கல்லில் போட்டியிடுகிறார். திண்டுக்கல்லை தளபதியின் கோட்டையாக மாற்றுவேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும், அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்த அளவில், இந்த தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சிக்கு திமுக ஒதுக்கியிருக்கிறது. சிபிஎம் சார்பில் அம்மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். எதிர் தரப்பில் அதிமுக இந்த தொகுதியை எஸ்டிபிஐ-க்கு ஒதுக்கியுள்ளது. அதிமுகவுக்கு திண்டுக்கல் தொகுதி எளிமையான வெற்றியை பெற்றுக்கொடுக்கும் தொகுதியாக இருக்கிறது.
இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவே அதிமுக இங்கு வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. அதேபோல, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின்னர் சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் எம்பி தேர்தல்தான். இப்படியாக அதிமுக இங்கு வலுவாக காலூன்றி இருக்கிறது. இப்போதும் கூட மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக 3ஐ தன் வசம் வைத்திருக்கிறது. இவ்வளவு இருந்தும் அதிமுக நேரடியாக போட்டியிடாமல் எஸ்டிபிஐ கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்கியிருப்பது ர.ராக்களிடையே லேசான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறையும் இதேபோல, பாமகவுக்கு சீட் ஒதுக்கியதால் திமுகவின் வெற்றி மிகவும் எளிமையாக அமைந்துவிட்டது என்றும் அவர்கள் புலம்புகின்றனர். மறுபுறம் சிபிஎம்-ஐ பொறுத்த அளவில், வேடசந்தூரில்தான் சிபிஎம் பலமாக இருக்கிறது. ஆனால் வேடசந்தூர் கரூர் தொகுதியை சேர்ந்ததாகும். எனவே மீதமுள்ளது திண்டுக்கல், பழநிதான். திண்டுக்கல்லில் பரிட்சயமான அளவுக்கு பழநியில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பரிட்சயம் ஆகவில்லை என்கிற பேச்சு அடிபடுகிறது.
மட்டுமல்லாது திமுக சார்பில் கடந்த முறை நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற வேலுச்சாமிக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டதால், திமுகவினர் சிபிஎம்-க்கு உடந்தையாக வேலை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. சூழல் இப்படி இருக்கையில் குழம்பிய குட்டையில் மீனை பிடிக்கலாம் என நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகி ஒருவர் திண்டுக்கல்லில் போட்டியிட முன்வந்திருக்கிறார்
இந்த லோக்சபா தேர்தலில் தவெக போட்டியிடாது என்று விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இருப்பினும் இக்கட்சியின் தொண்டர் அன்புரோஸ் என்பவர் திண்டுக்கல்லில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். விஜய்தான் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொல்லிவிட்டாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் யாரையும் போட்டியிட வேண்டாம் என்று சொல்லவில்லையே. நாங்கள் திண்டுக்கல்லை தளபதியின் கோட்டையாக மாற்றுவோம்” என்று முழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications