ஓபிஎஸ் உடன் அண்டர்டேபிள் டீலிங்..ஒ.செ.வை போட்டு கொடுத்த மாவட்டம்! கண்சிவந்த எடப்பாடி..பாய்ந்த ஆக்சன்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளரான மோகனை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. கட்சியில் எடப்பாடியின் ஆதரவாளர் போல காட்டிக் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக மாவட்ட செயலாளர்கள் போட்டுக் கொடுக்க இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்திருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கட்சியிலும் ஆட்சியிலும் எப்போது என்ன மாற்றம் கொண்டு வருவார் என்றே தெரியாது. எப்பொழுதும் அமைச்சர்கள் ஒருவித பதற்றமான சூழலில் இருப்பார்கள். யாராவது ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டால் போதும் அடுத்த நிமிடமே ஜெயா டிவியில் பிளாஷ் நியூஸ் ஓடும் அல்லது அடுத்த நாள் காலை பேப்பரில் அமைச்சரின் பதவி பறிப்பு என்ற செய்தி வரும்.

அது மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளராக இருந்தாலும் ஒன்றிய செயலாளராக இருந்தாலும் எப்போது மாற்றப்படுவார்கள் என்பது தெரியாது. அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக எப்படி இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.
கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தாலும் பல சீனியர்கள் தங்கள் மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் எடப்பாடி திணறி வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். குறிப்பாக பல சீனியர் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவே கூறப்படுகிறது. செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சனை செய்து வருவது வழக்கம் தான்.
சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்து இப்போது எடப்பாடி பக்கம் இருக்கின்றனர். ஆனால் பலர் இன்னும் மறைமுகமாக ஓபிஎஸ் உடன் நெருக்கமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. அப்படி இருந்த சிலர் குறித்து எடப்பாடி பழனிச்சாமி லிஸ்ட் எடுத்து வருகிறாராம். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்து கொண்டு ஓபிஎஸ் உடன் நெருக்கம் காட்டி வந்த ஒன்றிய செயலாளர் கட்சியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றிய செயலாளராக இருந்த மோகன்.
அதிமுகவில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கும் அவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலேயே இருந்து கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தனியே சென்ற போது இரண்டு ஒன்றிய செயலாளர்கள் ஓபிஎஸ் உடன் சென்றார்கள். ஆனால் வத்தலகுண்டு மோகன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் திடீரென மோகனின் வீட்டுக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். இதனையடுத்து மோகனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவினர் குரல் கொடுத்தனர்.
ஆனால் மோகனோ தனது மகன் அருண் தான் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர், இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் நிலையில் அருணின் மனைவிக்கு வளைகாப்பு நடைபெற்றதால் ஓபிஎஸ் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்தார். அதை வைத்து தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக குறி அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிலும் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட செயலாளர்களின் படத்தை மோகன் போடவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி மாவட்ட செயலாளர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் குறைபட்டு கொண்டாராம். மேலும், மேடையிலேயே திண்டுக்கல் சீனிவாசன் மோகனை வறுத்தெடுத்து விட்டார். தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் பாதியிலேயே கூட்டத்தை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மோகன் குறித்து ஒரு பெரிய ரிப்போர்ட்டை தயார் செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை அடுத்து நேற்று அவர் கட்சியில் இருந்து முழுவதுமாக நீக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி. விரைவில் மோகன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சந்திப்பார் என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications