யார் பக்கம் திண்டுக்கல்? மாஸ் காட்டும் திமுக..மல்லுக்கட்டும் அதிமுக! 2026ல் 4:3 தானா? விரிவான அலசல்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தின் பிரதான கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் இழந்த செல்வாக்கை மீட்க முன்னாள் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இரு முக்கிய முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் வேலைகள் சூடு பிடித்திருக்கிறது. திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமியும், சக்கரபாணியும் உயர்வேகத்தில் செயல்படுகின்றனர். திண்டுக்கல்லில் இருக்கும் 7 தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 இல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு ஏறக்குறைய 10 மாதங்கள் இருக்கிறது. ஜனவரி மாதத்தில் இருந்தே தேர்தலுக்கான வேலைகள் சூடு பிடித்து விடும். இடைப்பட்ட காலத்தில் அதாவது ஐந்து மாதங்களுக்குள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை கூட்டணிக்கு தலைமை வகுக்கும் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க தங்கள் மாவட்டங்களில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முன்னாள் அமைச்சர்களும் இந்நாள் அமைச்சர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல்லில் ஆளும் கட்சி நிர்வாகிகளும், ஆண்ட கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

AIADMK DMK Dindigul

திண்டுக்கல் மாவட்டம்

தற்போதைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய பரப்பளவு உள்ள மாவட்டம் திண்டுக்கல். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் என ஏழு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அதிமுகவிலும் திமுகவிலும் கிழக்கு மேற்கு என இரண்டு கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என இரு பெரும் முக்கிய புள்ளிகள் இருக்கிறார்கள்.

திமுக

திமுகவை பொருத்தவரை ஐ.பெரியசாமி திண்டுக்கல் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கும் தலைமை வகிக்கிறார். அமைச்சர் சக்கரபாணியும், ஐ.பெரியசாமியின் மகனும் எம்எல்ஏவும் ஆன செந்தில்குமார் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 4:3 என்ற கணக்கில் இரு கட்சிகளும் எம்எல்ஏக்களை பெற்றனர். ஜெயலலிதா இருந்த போதும் ஜெயலலிதா இல்லாத 4:3 என்ற கணத்திலேயே வெற்றி வாய்ப்பு திண்டுக்கல்லில் இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் கள நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்..

AIADMK DMK Dindigul

ஆத்தூர்

தட்டி வா என்றால் வெட்டி வருவார் என கலைஞரால் பாராட்டப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமியின் தொகுதி. தென் மாவட்டங்களில் பிரச்சனை என்றால் கூப்பிடு ஐபியை என்பார் கலைஞர் என தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினே பலமுறை கூறியிருக்கிறார். அப்படியாக ஐ.பெரியசாமிக்கு அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கிறது ஆத்தூரில். கடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் ஐ.பெரியசாமி தான். ஆத்தூரில் எந்த நிகழ்ச்சி என்றாலும் தவறாமல் ஆஜராகி விடுவார். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கூட அதனை பொருட்படுத்தாமல் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். ஆத்தூர் தொகுதியை பொருத்தவரை அதிமுக வென்றிருந்தாலும், தற்போதைய சூழலில் ஐ.பெரியசாமியின் அசைக்க முடியாத கோட்டை ஆத்தூர் தான். அதனால் அதிமுகவினர் அங்கு கட்சி பணியாற்றுவது கூட சற்று சுணக்கமாகத்தான் இருக்கிறது என்கின்றனர்.

AIADMK DMK Dindigul

திண்டுக்கல்

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுத்தது திண்டுக்கல். அதனால் என்னவோ இன்று வரை அதிமுகவின் கோட்டையாகவே இருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதற்குப் பிறகு முதன் முறையாக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் திண்டுக்கல் சீனிவாசன். அப்போதே அவருக்கு அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. 2021 தேர்தலிலும் திண்டுக்கல் சீனிவாசன் வெற்றி வாகை சூடினார். தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிரமாக தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டார். பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், நிர்வாகிகள் உடன் ஆலோசனை என தீவிரமாக பணியாற்றுகிறார். இந்த தேர்தலில் அவர் நிச்சயம் திண்டுக்கல் தொகுதியில் தான் போட்டியிடுவது உறுதியாக இருக்கிறது. 2026 தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து திமுக போட்டியிடுமா அல்லது வழக்கம்போல் கூட்டணி கட்சியினருக்கு தள்ளி விடுவார்களா என்பது தான் கேள்வி.

AIADMK DMK Dindigul

ஒட்டன்சத்திரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல தொகுதிகளில் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு மாறி இருக்கிறது. ஆனால் ஹாட்ரிக்கையும் தாண்டி டபுள் ஹாட்ரிக் அடித்து அங்கு 6 வெற்றி பெற்றவர் சக்கரபாணி. அவரின் இடைவிடாத வெற்றியை கவனித்த திமுக தலைமை 2021 தேர்தலில் வெற்றி பெற்றதும் அமைச்சராக்கி அழகு பார்த்தது. கூடுதலாக மாவட்ட செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் நடராஜன் சற்று நெருக்கடி கொடுத்தாலும் வழக்கம்போல் வெற்றிவாகை சூடினார் சக்கரபாணி. தொகுதி முழுவதும் சமுதாய ஆதரவு, தீவிரக் கட்சிப் பணி, நல்லது கெட்டது நிகழ்வுகளில் கலந்து கொள்வது என தொகுதியில் செல்ல பிள்ளையாகவே வலம் வருகிறார். இந்த தேர்தலில் போட்டியிட்டால் 7வது முறையாக வெற்றி நிச்சயம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

AIADMK DMK Dindigul

வேடசந்தூர்

திண்டுக்கல் கரூர் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் தொகுதி. நாடாளுமன்றத் தேர்தல் என்று வரும்போது அது கரூர் தொகுதியாக மாறிவிடும். அதிமுகவின் வலுவான கோட்டையாக இருந்த வேடசந்தூரில் கடந்த முறை ஓட்டை விழுந்தது. 2011 தேர்தலில் தென்னம்பட்டி பழனிச்சாமி வென்ற நிலை 2016 தேர்தலில் விபிபி பரமசிவம் வெற்றி பெற்றார். ஆனால் 2021 தேர்தலில் திமுக வசம் சென்றது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய காந்திராஜன் வெற்றி பெற்றார். கடந்த முறை அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்த போதும் ஒரு சில காரணங்களால் திமுக வசம் சென்றது. தற்போது ஆளும் கட்சிக்கு அங்கு சில எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் 2026 தேர்தலில் மாற்றம் இருக்கும் என்கின்றனர் வேடசந்தூர் வாசிகள். மீண்டும் விபிபி பரமசிவம் அங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி ராஜன் நெருக்கடி கொடுப்பாரா அல்லது விட்டு தருவாரா என்பதை தேர்தல் முடிவு செய்யும்.

AIADMK DMK Dindigul

நிலக்கோட்டை

இதுவரை திமுக வெற்றி பெறாத தொகுதி நிலக்கோட்டை தான். காங்கிரஸில் இருந்த போதும், தமாகவில் இருந்த போதும், சுயேசையாக போட்டியிட்ட போதும் அங்கு வெற்றி பெற்றார் பொன்னம்மாள். அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களை அதிமுகவே வெற்றி வாகை சூடி இருக்கிறது. 2016, 2019 இடைத்தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் தேன்மொழி வெற்றி பெற்றிருக்கிறார். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால் வாக்களித்த நிலக்கோட்டை மக்கள் திமுக போட்டியிட்டபோது வாக்களிக்காமல் விட்டது வினோதம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில் நிலக்கோட்டை இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது. இப்படியாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் நிலக்கோட்டை 2026 தேர்தலில் யாரை வெற்றி வாகை சூட வைக்கப் போகிறது என்பது சற்று இழுபறியாகவே இருக்கிறது. 2026 தேர்தலில் மீண்டும் போட்டியிட தேன்மொழி ஆர்வம் காட்டி வருகிறார். அவரது வெற்றி வாய்ப்பும் அதிகம் என்கின்றனர் நிலக்கோட்டை அதிமுகவினர்.

AIADMK DMK Dindigul

பழனி

அதிமுக திமுக மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதி பழனியில் இரண்டு முறை ஒருவர் வெற்றி பெற்றதில்லை என்பதை உடைத்து புதிய சாதனை படைத்தவர் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் திமுக மாவட்ட செயலாளருமான ஐபி செந்தில்குமார். அவர் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தும் விடாமல் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் பழனி தொகுதியிலேயே போட்டியிட்ட அவர் முதன் முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார், அதன் பிறகு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். பழனியில் இரண்டு முறை ஒருவர் வெற்றி பெற்றதில்லை என்பதை உடைத்து புதிய சாதனை படைத்தவர். 2021 தேர்தலிலும் வெற்றி தான். திண்டுக்கல்லில் இருந்தாலும் பழனியில் தான் செந்தில்குமார் வாசம். கட்சி நிகழ்வுகளிலும் பொது நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தீவிரமாக களப் பணியாற்றி வருகிறார். இந்த முறை பழனி தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெறுவது உறுதி என்கின்றனர் திமுகவினர்.

AIADMK DMK Dindigul

நத்தம்

திமுக வசம் இருந்த நத்தம் தொகுதியை அதிமுக கோட்டையாக மாற்றியவர் நத்தம் விஸ்வநாதன். ஆண்டி அம்பலத்தை தோல்வி அடையச் செய்து அமைச்சராகவும் பதவி ஏற்றார். 2016 சட்டமன்ற தேர்தலில் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டி இருந்தது. ஐ.பெரியசாமி இடம் தோற்றுப் போனார் நத்தம் விஸ்வநாதன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்த அவர் பிறகு எடப்பாடி தரப்பில் தஞ்சம் புகுந்தார். 2021 தேர்தலில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் 2026 தேர்தலிலும் நத்தம் தொகுதியிலேயே வெற்றி பெறுவார் என்கின்றனர். தற்போதைய சூழலில் திண்டுக்கலில் திமுக அதிமுகவுக்கு மூன்றுக்கு மூன்று தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. வேடசந்தூர் தொகுதி மட்டுமே இழுபறியாக இருக்கிறது என்கின்றனர் திண்டுக்கல் மாவட்ட திமுக, அதிமுகவினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+