என்னாது மனித சங்கிலியில் தேமுதிகவா?.. எங்களை கூப்பிடவே இல்லை.. எப்படி போவது? பிரேமலதா
திண்டுக்கல்: அதிமுகவுடனும் பாஜகவுடனும் கூட்டணி இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்றைய தினம் தேமுதிக கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.
அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேமுதிகவை பொருத்தவரை மது இல்லாத போதை இல்லாத கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

உறுதிமொழி
இதை வலியுறுத்தி மாவட்டம்தோறும் உறுதிமொழி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கஞ்சா விற்பனை, மது விற்பனை அதிக அளவில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் போதை அடிமையாகும் சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது.

பெட்ரோல் குண்டுவீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. இது வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு சம்பவமாகும். பெட்ரோல் குண்டு வீச்சில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சனையின்றி பாரபட்சமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்
மக்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விடுதலைச் சிறுத்தைகள், மனித சங்கிலி போராட்டம் காரணமாக சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த இரண்டிற்கும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனை தேமுதிக வரவேற்கிறது.

சட்டம் ஒழுங்கு
ஏனென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனித கடமையாகும். மனித சங்கிலி போராட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக அவர்கள் எங்களை அழைக்கவும் இல்லை, தகவல் தெரிவிக்கவும் இல்லை. அழைக்காத காரணத்தினால் இதில் நாங்கள் பங்கேற்க போவதில்லை.

2024 லோக்சபா தேர்தல்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை தமிழக மக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது சட்டசபைக்கும் தேர்தல் வரும் என கூறி வருகிறார்கள். எங்களை பொருத்தமட்டில் எந்த தேர்தலாக இருந்தாலும் பணம் கொடுக்காமல் நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.

பாஜக- அதிமுகவுடன் கூட்டணி இல்லை
பாஜக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. தற்போது வரை யாருடனும் கூட்டணி கிடையாது, தேர்தல் நடக்க இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதாக இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. மக்கள் பிரச்சினை தொடர்பாகவும் மது விலக்குக்கு எதிராகவும் தேமுதிக போராட்டம் நடத்தும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications