இது உனக்கு தேவையா கவுதம்..வேனுக்குள் நாட்டுக்கட்டை! செல்போன் வீடியோவால் சிக்கிய ’புஷ்பா’ புள்ளிங்கோ!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நாட்டு சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புஷ்பா பட பாணியில் சந்தன மரங்களை வெட்டியதோடு அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரின் சோதனையில் அவர்கள் சிக்கி உள்ளனர்.
கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் ஒரு காலத்தில் அதிக அளவில் சந்தன மரங்கள் விளைந்தது. சிலர் அதனை வெட்டி கடத்தி விற்பனை செய்து வந்தனர். அவர்களில் முக்கியமானவர் வீரப்பன் தொடர்ந்து போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதிகளில் சந்தன மர கடத்தல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும்தான் இயற்கையாகவே சந்தன மரங்கள் அதிகம் விளைகிறது. அதே நேரத்தில் மதிப்புமிக்க மரம் என்பதால் பலர் அதனை தங்கள் விவசாய நிலங்களில் அதிக அளவில் வளர்த்து வருகின்றனர்.
தமிழக அரசின் வனத்துறை சார்பில் மரக்கன்றுகளும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் வானவியல் விரிவாக்க மையம் மூலம் சந்தன மரங்களை பெற்று தங்கள் நிலங்களை வளர்க்கலாம். இதற்கு சில மானியங்களும் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட பருவத்தை எட்டியதும் அதனை வனத்துறை உரிமம் பெற்று வெட்டி விற்பனை செய்யலாம். தற்போது சந்தன மரத்துக்கு அதிக அளவில் கிராக்கி நிலவுகிறது. அதிக விலையுள்ள அதே நேரத்தில் வளர்ப்பதற்கும் ஏற்ற வகையான சந்தன மரத்தை வளர்ப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பல இடங்களில் சந்தன மரம் வளர்க்கப்படுகிறது.
திருப்பூரில் கூட துரைசாமி என்பவர் 50 ஏக்கர் பரப்பளவில் சந்தன மரத்தை நடவு செய்துள்ளார். இதேபோல சேலம், நாமக்கல், திண்டுக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சந்தன மரங்கள் வளர்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 12,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு மரம் சராசரியாக 45 முதல் 80 கிலோ வரை இருக்கும் இந்த நிலையில் தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி விற்பனை செய்து வருவது அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்லில் சிறுமலை உள்ளிட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் வளர்க்கப்படும் நிலையில் அவற்றை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர். மேலும் வனவிலங்குகள் மற்றும் அவற்றின் உடல் பாகங்களை கடத்துவதும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட யானை தந்தத்தை கடத்தியதாக பலர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் அருகே நாட்டு சந்தன மரங்களை வெட்டி கடத்தியதாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தன மரங்களை வெட்டியதோடு அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரின் சோதனையில் அவர்கள் சிக்கி உள்ளனர்.
திண்டுக்கல் குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சந்தன மரங்கள் வளர்க்கப்படுகிறது. இந்நிலையில் அவற்றை மர்ம நபர்கள் வெட்டி கடத்துவதாக புகார் கூறப்படுகிறது. அந்த வகையில் மல்லபுரம் மெயின் ரோட்டில் மயானம் அருகே வேன் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் அவர்கள் செல்போனை வாங்கி சோதனை செய்துள்ளனர்.
அதில் மூன்று சிறிய வகை சந்தன மரங்களை வெட்டியதோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சந்தன மரம் கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், ரஞ்சித், கௌதம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications