திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்! கட்சி சரிவுப்பாதையில் பயணிப்பதாக வேதனை!
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் எஸ்.ஆர்.கே. பாலு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார்.
தேமுதிக சரிவுப் பாதையில் பயணிப்பதால் இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் நாளுக்கு நாள் விலகி வருவதால் தேமுதிக தலைமை மிகுந்த கவலை கொண்டுள்ளது.

தேமுதிக நிர்வாகிகள்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடங்கிய புதிதில், முன்னாள் அமைச்சர்கள் மருங்காபுரி பொன்னுச்சாமி, கு.ப.கிருஷ்ணன், பண்ருட்டி ராமச்சந்திரன், நடிகர் அருண்பாண்டியன், சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், மாஃபா பாண்டியராஜன், என பல முக்கியப் பிரமுகர்கள் அந்தக் கட்சியில் இருந்தனர். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக விறுவிறுவென வளர்ச்சிப்பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

2011 தேர்தல்
மக்களுடனும் இறைவனுடனும் மட்டுமே கூட்டணி எனப் பேசி வந்த விஜயகாந்த் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் அமர்ந்தார். அரசியலில் எந்தளவு வேகமாக முன்னேறினாரோ அதேயளவு அவருக்கு உள்ள முன் கோபம் காரணமாக பின் தங்கவும் செய்தார். மேற்கண்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜயகாந்தின் முன் கோபம் காரணமாக கோபித்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக வெளியேறத் தொடங்கினர்.

விஜயகாந்த் நண்பர்
இதில் உச்சகட்டமாக விஜயகாந்தின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட மதுரை சுந்தர்ராஜனும் ஒரு கட்டத்தில் தேமுதிகவை விட்டு வெளியேறினார். இந்நிலையில் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருக்கும் சூழலில் முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு செல்வது மேலும் அதிகரித்துள்ளது. கூட்டணி விவகாரத்தில் தேமுதிக தலைமை கோட்டைவிடுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கூட்டணி முடிவு
தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் என ஒரு மாதத்திற்கு முன்பே பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை பெரும்பாலான நிர்வாகிகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. திமுகவுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி வைப்பதையே அவர்கள் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அதற்கு நேர் மாறாக தலைமை எடுத்த முடிவால் பல இடங்களில் நிர்வாகிகள் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

தேமுதி நிர்வாகி
ஆனால் அப்போதும் சுதாரித்து மாற்று நடவடிக்கைகளை எடுக்க முன் வராததால் இன்று மாவட்டச் செயலாளர் ஒருவரை திமுகவிடம் பறிகொடுத்து நிற்கிறது தேமுதிக. திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலுவை பொறுத்தவரை அக்கட்சியின் வளர்ச்சிக்காக பல லட்ச ரூபாய் சொந்த நிதியை தண்ணீர் போல் செலவழித்திருக்கிறார். காய்கனி கமிஷன் மண்டியும், லாரி தொழிலும் செய்து வரும் இவர், தேமுதிக வளர்சிக்காக ஒட்டன்சத்திரம், பழனி தொகுதியில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தியவர்.

அமைச்சர் சக்கரபாணி
இதனிடையே திமுகவில் இணைந்துள்ள அவர், தேமுதிக சரிவுப் பாதையை நோக்கி பயணிப்பதால் தாம் திமுகவில் இணைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். தேமுதிக மாவட்டச் செயலாளரை திமுகவுக்கு அழைத்து வந்ததன் பின்னணியில் அமைச்சர் சக்கரபாணி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications