அத்திவரதர் திருவிழா நிதி மோசடி-திண்டுக்கல் டிரான்ஸ்பர் ஆன மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் ரெய்டு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இன்று காலை முதல் மாலை வரை சுமார் 8.30 மணிநேரம் இந்த சோதனை நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழு இந்த சோதனையை நடத்தியது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் நாம் பேசிய போது கிடைத்த தகவல்கள்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பொறுப்பேற்பதற்கு முன்னதாக சென்னையில் உள்ளாட்சிகள் துறையில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் தேனி மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றி இருக்கிறார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பணியாற்றிய போது, புகழ்பெற்ற அத்திவரதர் கோவில் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவுக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் முறைகேடுகள் நடைபெற்றது என்பது அப்போதே எழுந்த புகாராம். இதனடிப்படையில் காஞ்சிபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்கனவே வழக்கும் பதிவு செய்திருக்கின்றனர்.
இதன்பின்னரே திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி இடமாறுதலாகி இருக்கிறார். திண்டுக்கல் மாநகராட்சியில் கிருமி நாசினி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாகவும் இதில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது. அத்துடன் பல்வேறு புகார்கள் மகேஸ்வரி மீது முன்வைக்கப்பட்டன.
இத்தகைய புகார்களின் அடிப்படையில் இன்று திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 12-வது கிராஸில் உள்ள மகேஸ்வரி வீட்டில் காலை முதல் மாலை வரை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 போலீசார் ஈடுபட்டனர். சுமார் 8.30 மணிநேரம் நடந்த இந்த சோதனை நிறைவடைந்தது. இச்சோதனையில் எந்த பொருட்கள், ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட மகேஸ்வரிக்கு சொந்தமான 5 இடங்களிலும் சோதனை நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications