கோவையில் இருந்து காரில் வந்த லாக்கர் சாவி.. அதிரடி காட்டிய ED அதிகாரிகள்.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
திண்டுக்கல்: அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் இருந்து வரும் நிலையில், அவருக்கு நெருக்கமான புள்ளிகளின் வீடுகளில் ரெய்டை தீவிரப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை. அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனின் வீட்டில் ரெய்டு நடத்தி, லாக்கர் சாவியை கோவையில் இருந்து வரவழைத்து திறந்து சோதனை போட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக (தெற்கு) ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது வீடு வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ளது. நேற்று பிற்பகலில் வேடசந்தூர் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 பேர், சாமிநாதனின் வீட்டில் திடீரென சோதனை செய்தனர். இன்னொரு டீம் வேடசந்தூர் அருகே தமுத்துப்பட்டி கிராமம் அருகே உள்ள வீரா சாமிநாதனின் தோட்டத்து வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, சாமிநாதன் சென்னையில் இருந்தார். வீட்டில் அவரது தாய் மட்டுமே இருந்தார். நேற்று பிற்பகல் தொடங்கி சுமார் 6.30 மணி வரை சோதனை நடத்தினர். அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் மீண்டும் வந்து ரெய்டை தொடர்ந்தனர். இரவு வரை சோதனை நீடித்தது.
வீட்டில் இருந்த ஒரு லாக்கர் சாவியை அதிகாரிகள் கேட்ட நிலையில், சாவி இப்போது இங்கு இல்லை. கோவையில் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது. லாக்கரை திறந்து பார்க்க வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதியாக இருந்ததால், கோவையில் இருந்து வீரா சாமிநாதனின் உதவியாளர் சூர்யா என்பவர் காரில் வந்து சாவியை கொடுத்தார்.
லாக்கர் சாவியை பெற்றுக்கொண்ட அமலாக்கத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையை முன்னிட்டு 30-க்கும் மேற்பட்ட போலீசார் காவலில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் மதுபான பார்கள் நடத்துவதற்கான அனுமதி வழங்க பணம் வசூலித்து தந்ததாக சாமிநாதன் மீது புகார் எழுந்த நிலையில், இந்த சோதனை நடந்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை நேற்றைய தினம் சாமிநாதன் வீடு மற்றும் தோட்ட பங்களாவில் சோதனை நடத்தியது.
இந்நிலையில் கரூரில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு உள்ளிட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பணமோசடி செய்ததாக அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்தனர்.
தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் அவருக்கு சொந்தமான இடங்கள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications