Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்?
திண்டுக்கல்: அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமானார் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் மேற்கொண்ட போது 'ஒரு கவுண்டர் தமிழ்நாட்டில் முதலமைச்சராக போகிறார்" என பேசினார். தேர்தல் ஆணைய விதிகள் படி சாதி மதத்தை குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பது குற்றம் என்ற நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் மீது புகார் அளிக்க திமுக தயாராகி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சாதி மதத்தை குறிப்பிட்டு வாக்கு கேட்ட ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அதனை செல்லாது என அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தை விட தேர்தலின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது. சீனியர்கள் தொடங்கி ஜூனியர்கள் வரை சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல்லில் சீனியருக்கும் ஜூனியருக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் அதிமுகவின் பொருளாரும் திண்டுக்கல் எம்எல்ஏவும் ஆன திண்டுக்கல் சீனிவாசன் அங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

திண்டுக்கல் சீனிவாசன்
ஏற்கனவே இதே தொகுதியில் நான்கு முறை அவர் எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் திமுக மாவட்ட செயலாளருமான ஐபி செந்தில் குமார் முதன்முறையாக திண்டுக்கலில் போட்டியிடுகிறார். ஏற்கனவே மூன்று முறை பழனியில் போட்டியிட்டு இரண்டு முறை வென்றவர் ஐபி செந்தில் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. 75 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக - திமுக மாவட்ட செயலாளர்கள், நேருக்கு நேர் மோதுவதும் குறிப்பிடத்தக்கது.
ஐபி செந்தில் குமார்
தற்போது இருவரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். 10 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும் ஒருமுறை அமைச்சராகவும் இருந்த திண்டுக்கல் சீனிவாசன் தொகுதிக்கு செய்தது என்ன? என கேள்வி எழுப்பி வருகிறார் ஐபி செந்தில் குமார். அதே நேரத்தில் ஐ பெரியசாமியின் குடும்பம் ஊழல் செய்து கோடி கோடியாய் சொத்து சேர்த்திருப்பதாக திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்து வருகிறார்.
சாதி பேச்சு சர்ச்சை
இப்படி இரு தரப்பும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஒரு நிலையில் தனது வழக்கமான 'உளறல்' பேச்சால் புதிய பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் காப்பிளியப்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த வாக்காளர்களை பார்த்து, "நீங்கள் எல்லாம் ஒக்கலிக கவுண்டர்கள். எடப்பாடி பழனிச்சாமி கொங்கு வேளாள கவுண்டர். ஒரு கவுண்டர் தமிழ்நாட்டை ஆளப்போகிறார். எனவே நீங்கள் சாதி மதம் பார்க்காமல் வாக்களிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
திமுக புகார்
பொதுமக்களின் சாதியை குறிப்பிட்டதோடு முதல்வர் வேட்பாளரின் சாதியை குறிப்பிட்டு திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் அத்தோடு முடிவடைந்து போனது என நினைக்கும் நேரத்தில் தான் திமுக தனது வேலையை ஆரம்பித்திருக்கிறது. சீனிவாசனின் பேச்சு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் புகார் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
மேலும், மாநில தேர்தல் அதிகாரியிடமும் புகார் கொடுக்க திமுக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக திமுகவினரிடம் பேசிய போது," மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் போது சாதி மதம் ஆகியவற்றை குறிப்பிட்டு வாக்கு கேட்கக் கூடாது. இது ஒரு தண்டனைக்குரிய குற்றம். அதுமட்டுமில்லாமல் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம். இதனால் அந்த வேட்பாளருக்கு சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும் 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தடையும் விதிக்கப்படும்.
வெற்றி செல்லாது
இது மட்டுமல்லாமல் சாதி மதத்தை சொல்லி வாக்கு சேகரித்தால் ஒருவேளை அந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது செல்லாது என அறிவிக்க முடியும். இதனை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வான ஏழு நீதிபதிகள் கொண்ட அமரவும் உறுதி செய்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் பழுத்த அரசியல்வாதியான திண்டுக்கல் சீனிவாசன் இப்படி பொதுவெளியில் சாதி குறித்து பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். மேலும் நாங்கள் புகார் கொடுத்தால் இடைப்பட்ட காலத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொள்ள தடை வாங்க முடியும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications