அங்கித் திவாரியை நாங்களும் விசாரிக்கணும்.. மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை.. விசாரணை ஒத்திவைப்பு!
திண்டுக்கல்: அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியான விசாரணை நடத்த அனுமதி கோரி, அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், சுரேஷ் பாபுவிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத் துறையின் மதுரை அலுவலகத்திற்குள் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து கண்டறிய முடியும்" எனத் தெரிவித்தார்.
மேலும், அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அவரைப் பாதுகாக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முயல்கின்றனர். அங்கித் திவாரி கைது செய்யப்படும் வரை அவர் மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சிக்கின்றனர் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அங்கித் திவாரியின் ஜாமீன் மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டது. அங்கித் திவாரிக்கு வரும் ஜனவரி 11ஆம் தேதி நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கித் திவாரியிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, அமலாக்கத் துறை சார்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திண்டுக்கல் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை வரும் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications