செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்.. வேடசந்தூர் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நிறைவு
திண்டுக்கல்: திண்டுக்கல் திமுக நிர்வாகி வீட்டில் நடந்த அமலாக்கத் துறை சோதனை நிறைவடைந்தது. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றதாக தெரிகிறது.
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன். இவருக்கு வேடசந்தூரில் தோட்டம், வீடு உள்ளது. இவர் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் பழனியில் பள்ளியை நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்தமான கல்லூரியும் உள்ளது. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இவர் டாஸ்மாக் பார் நடத்துவதற்காக அனுமதி வழங்க 25 மாவட்டங்களில் பணத்தை வசூலித்து கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

அந்த புகாரின் பேரில் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை நேற்றைய தினம் சாமிநாதன் வீட்டில் சோதனை நடத்தியது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீடு, தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் இரு குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை இன்று இரவு நிறைவடைந்தது. இந்த சோதனையின் போது சாமிநாதன் வீட்டில் இல்லை. அவரது தாய் மட்டுமே இருந்தார். இந்த சோதனையின் போது அவருடைய தோட்டத்து பங்களாவிலிருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் இருந்த போது பணமோசடி செய்ததாக அமலாக்கத் துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். அவருக்கு சொந்தமான இடங்கள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் குவாரி மண் விவகாரத்தில் மோசடி செய்ததால் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த நிலையில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நிறைவடைந்தது. சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்பு துறை புகாரில் தங்களை இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தூத்துக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications